Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
Pages
▼
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி
தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதற்காக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
பிரதமரின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், அக்டோபர் 15-ம் தேதி வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 19-ம் தேதி, பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுவை முதலமைச்சர்களும், கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு அரசு, 30 நாட்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டிஎம்சி தண்ணீராவது வேண்டும் என்று கேட்டது. ஆனால், கர்நாடகம் மறுத்துவிட்டது. அதையடுத்து, ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் அது சாத்ததியமில்லை என்று கூறிய கர்நாடக முதல்வர், அந்த உத்தரவுக்கு எதிராக வெளிநடப்புச் செய்தார். அதே நேரத்தில், 9 ஆயிரம் கனஅடி நீர் என்பது எதற்குமே போதாது என தமிழகமும் அதை ஏற்க மறுத்தது.
இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. 24 நாட்களுக்கு தினசரி 2 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியது.
"உயர்ந்த அதிகாரம் படைத்த பிரதமரின் உத்தரவை செயல்படுத்த முடியாது என்று கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது"
உச்சநீதிமன்றம்
அந்த மனு, நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பது ஏன் என்று நீதிபதிகள் கர்நாடக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
கோரிக்கை
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றும் கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் அந்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். 'உயர்ந்த அதிகாரம் படைத்த பிரதமரின் உத்தரவை செயல்படுத்த முடியாது என்று கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறிய நீதிபதிகள், அக்டோபர் 15 வரை விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம், தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டார்கள்.
அதே நேரத்தில், தினசரி 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பிரதமர் உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் இருந்தது ஏன் என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிடும்போது, 9 ஆயிரம் கனஅடி நீர் போதுமானது அல்ல என்றும் 2 டிஎம்சியாவது வேண்டும் என்று கோரினார். ஆனால், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துத்தான் பிரதமர் இந்த முடிவை எடுத்திருப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், பற்றாக்குறை காலத்தில் தங்களுக்கு வர வேண்டிய நியாயமான அளவைத்தான் தமிழகம் கோருவதாக வைத்திநாதன் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக