Pages

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சிவகாசி வெடிவிபத்து: விசாரணைக்கு உத்தரவு









 தினத்தந்தி
 --------------------------

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.





விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பார் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகர் அருகே முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற மூத்த அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, நிதித் துறை செயலாளர் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விபத்து நடந்த தொழிற்சாலைக்கு நாகபுரியில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி 2006-ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளார். அந்த ஆலையில் ஆகஸ்ட் 28-ம் தேதி ஆய்வு நடத்தப்பட்டது.

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் மண்டல இயக்குநர் ஆய்வு செய்தபோது, அங்கு அளவுக்கு அதிகமாக ரசாயனப் பொருள்கள் இருப்பு, அளவுக்கு அதிகமான பணியாளர்கள், பாதுகாப்புக்காக விடப்பட வேண்டிய இடங்களில் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விதிமீறல்கள் இருந்தது சுட்டிக்காட்டப்பட்டு அந்த ஆலைக்கான அனுமதி கடந்த 4-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவின் நகல் கடந்த புதன்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரால் பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடைபெற்ற விரிவான விவாதத்துக்குப் பிறகு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை பட்டாசுத் தொழிற்சாலை இயங்கியது குறித்தும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகாசி அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ.4.5 கோடி ஒதுக்கீடு: சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவை மேம்படுத்த ஏற்கெனவே தமிழக அரசால் ரூ.1.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீக்காயப் பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பிசியோதெரபி, மறுவாழ்வுப் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தீக்காயப் பிரிவை உயர் சிகிச்சை மையமாக மாற்றி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அனைத்து ஆலைகளிலும் ஆய்வு: இதுபோன்ற வெடி விபத்து துயரச் சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளையும் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


 உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு


  புது தில்லி, செப். 6: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து மத்திய தொழிற்துறைக் கொள்கை விவகாரங்கள் துறை இணைச் செயலர் சைதன்ய பிரசாத் தலைமையில் உயர்நிலை விசாரணை நடத்த மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா உத்தரவிட்டார். இது தொடர்பாக அவரது அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விபத்தின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு வெடிமருந்து சட்டத்தின்படி உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மத்திய தொழிற்துறை கொள்கை விவகாரங்களுக்கான இணைச் செயலர் சைதன்ய பிரசாத் இந்த விசாரணையை நடத்துவார். சிவகாசியில் உள்ள வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை மாலையில் இருந்து சம்பவ இடத்தில் உள்ளனர். வெடிமருந்து தலைமைக் கட்டுப்பாட்டாளரும் இணை கட்டுப்பாட்டாளரும் சம்பவ இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

-------------------

தினமணி

----------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக