Pages

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

காவிரி ஆணையத்தைக் கூட்டாதது ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்







காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவதில் மத்திய அரசு அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்தக் கூட்டத்தை விரைவில் நடத்த பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே தேதியை நிர்ணயித்து அறிவிக்கும் நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டுவதில் மத்திய அரசு மெத்தனமாகச் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 


காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேண்  ராவல், ""காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க வசதியான தேதியைத் தெரிவிக்குமாறு சம்பந்தபட்ட மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒரு வாரம் ஆகியும் பதில் வரவில்லை'' என்று கூறினார்.  அப்போது குறிக்கிட்ட தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், கூட்டத்தின் தேதி குறித்து தகவல் தெரிவிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் சார்பில் மாநில தலைமைச் செயலர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

ஆனால், பிரதமர் அலுவலகம் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. கூட்டத்துக்கான தேதியை தொலைபேசி அல்லது விடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி இறுதி செய்திருக்கலாம் என்றார்."நீதிமன்றமே தேதியை தீர்மானிக்கும்':  இதைக் கேட்ட நீதிபதிகள், பிரதமரின் வசதிக்கு ஏற்ப கூட்டத்தின் தேதியை நிர்ணயிக்காமல் மற்றவர்களின் வசதியை ஏன் கேட்கறீர்கள்?. இவ்வாறு மெத்தனமாக இருந்தால் யாருடைய வசதியையும் கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்றமே கூட்டத்தின் தேதியை அறிவிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்றனர்.  இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு மத்திய அரசின் கருத்து என்ன என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "கர்நாடக அரசின் பதில் மனு இதுவரை கிடைக்கவில்லை' என்றார்."மத்திய அரசின் போக்கால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது': இதைக் கேட்ட நீதிபதிகள், ""கர்நாடக அரசின் பதில் மனுவின் 39-வது பக்கத்தில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன ("டூத்லெஸ் சிஆர்ஏ' - அதிகாரமில்லா ஆணையம்). அதைக்கூட பிரதமர் அலுவலகம் படிக்கவில்லையா? கடந்த விசாரணையின்போதே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் (நீதிமன்றம்) கவலை தெரிவித்திருந்தோம். அதன் பின்பும் அலட்சியமாக இருக்கிறது மத்திய அரசு. 

இந்தப் போக்கு எங்களின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது; பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நீர்வளத் துறை அமைச்சகத்தின் உதவிச் செயலர், துணைச் செயலர், ஆணையர் போன்ற அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால், மேலும், கண்டிக்க நா எழவில்லை'' என்று கூறினர். இதை தொடர்ந்து, ""இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு சார்பில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) பதில் அளிக்கப்படும்'' என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உறுதியளித்தார். இதையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

இம்மாத இறுதியில் காவிரி ஆணையக் கூட்டம்காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் இம்மாத இறுதியில் கூட்டப்படலாம் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பிற மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தும்போது, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு வசதியான தேதியை மத்திய அரசு கேட்கும். அதுதான் நடைமுறை. மாநில முதல்வர்களை ஒருங்கிணைப்பது கடினமானது. என்றாலும், இம்மாத இறுதியில் காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வாய்ப்புள்ளது'' என்று பதிலளித்தார்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

---------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக