Pages

வியாழன், 14 பிப்ரவரி, 2013

இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை; ஜெனிவா மாநாட்டுக்கு நவநீதம்பிள்ளை பரிந்துரை



இலங்கையில் மீறப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதற்கான ஒரு பொறிமுறையை வகுக்கவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.
 
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அவர் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளார்.
 
இலங்கை தொடர்பில் ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்க அறிக்கை ஒன்றையும் அவர் வழங்கியிருக்கிறார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரையொட்டி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ள நவநீதம்பிள்ளை, சட்டம், ஒழுங்கு, நீதி நிர்வாகம், கொலைகள் மற்றும் காணாமற் போனமை தொடர்பான விசாரணைகள், தடுத்துவைப்பு தொடர்பான கொள்கைகள், உள்ளக இடம்பெயர்வு, காணி, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், இராணுவ மயமாக்கல் குறைப்பு, நல்லிணக்கம் என்ற விடயங்கள் குறித்துத் தனித்தனியாகச் சுட்டிக்காட்டித் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு செப்ரெம்பரில் இலங்கை வந்த ஐ.நா. நிபுணர் குழுவால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், நாற்பது ஆண்டுகளாக நிலவிவரும் இன முரண்பாட்டுக்கு நீதி வழங்க உண்மையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை இலங்கை அரசு விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
19 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் இலங்கை நிலைவரம் குறித்து விளக்கியிருப்பதுமட்டுமன்றி, இவை தொடர்பில் தனது பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார். 
 
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
 
இலங்கை அரசுக்கு தரும் பரிந்துரைகள்
 
*மாற்றமுறும் நீதிக்கான அணுகுமுறைக்கு மிகவும் ஆக்கபூர்வமான இணைப்புப் பகுதியாக உண்மையைக் கண்டறியும் ஒரு பொறிமுறையை ஸ்தாபித்தல்.
*சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இலங்கையில்  நிலுவையில் உள்ள சம்பந்தப்பட்ட வழக்குகளை மீளாய்வு செய்வதற்கு பாரதூர மற்றும் மரபணு மூலம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தல்.
*சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகப் பொருத்தமான சட்டங்களை வரைதல், தகவல்களுக்கான உரிமை, காணாமல் போனவர்களுக்கான சட்டங்களைத் தீவிரப்படுத்துதல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரச் செயல்கள், மனிதாபிமானமற்ற தரமற்ற சிகிச்சைகள் அல்லது தண்டனைகள் போன்றவற்றுக்கு சர்வதேச நியதிகளுக்கு அமைவாக நடத்தல்.
*தேசிய நிறுவகங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதலும், வலுவூட்டுதலும்.
*சர்வதேச நியமங்களுக்கு அமைவாக தேசிய திருத்தக் கொள்கையை அபிவிருத்தி செய்தல். 
*விசேடமாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 19/2 ஆம் சரத்துக்கு அமைவாக விசேட தகுதிவாய்ந்தவர்களை நாட்டு பயணத்துக்கு அனுமதித்தல்.
*கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்த, தேசிய ரீதியில் திட்டமொன்றை செயற்படுத்துவதற்குப் பகிரங்க மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் அதன் நோக்கங்களை விஸ்தரிப்பதும் கடப்பாடுகளையும் பொறுப்புகளையும் மீளாய்வு செய்தல்.
*காணாமல் போனவர்கள் பற்றிய புலன் விசாரணைகளைத் துரிதப்படுத்த ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறு ஒரு விசேட ஆணையாளரை நியமித்தல்.
*இராணுவ நீதிமன்றங்களினதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் மீதான விசாரணைகளும் பகிரங்கப்படுத்தப்படுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடப்பதும்.
*2006 ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைப் பிரசுரிப்பதன் மூலம் அங்கு சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை சர்வதேச நியமங்களுக்கேற்ப மதிப்பீடு செய்து நிலுவையிலுள்ள வழக்குகளைத் தீர்த்தல்.
*சிறுபான்மை சமூகத்தினரைத் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் முற்றாக ஈடுபடுத்துவதற்காக இராணுவத் தலையீடு மற்றும் அதிகாரப் பிரயோகம் ஆகியவற்றைத் தளர்த்தல்.
*நல்லிணக்க நடவடிக்கைகளில் சிவில் சமூகத்தினரையும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளையும் ஈடுபடுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துக்கு மேலும் வலுவூட்டல்.
*இலங்கையிலுள்ள முன்னணி சமூகத் தலைவர்கள் உட்பட ஏனைய பங்களிப்பாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் காட்டப்பட்ட கரிசனையைப்பற்றி விதந்துரைத்த  கருத்துகள் தொடர்ந்தும் விவாதங்களையும் கருத்துக்கணிப்புகளையும் முன்னெடுக்க வாய்ப்பளிக்கும். எனினும் இந்தக் கட்டத்தில் அதன் எல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உந்துதலுக்கு அமைவாக ஆணையகம் தனது கரிசனையை தொடர்ந்தும் கொண்டுசெல்லவேண்டும். இது தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானம் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதன்மூலம் உள்நாட்டு விசாரணைகளை வழிநடத்த முடியும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
---------------------------------------------------------------

------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக