Pages

வியாழன், 21 பிப்ரவரி, 2013

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது



புது டெல்லி, பிப். 21 - பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இறுதிக் கெடு விதித்திருந்தது. இதையடுத்து இத்தனை காலம் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாமல் சுணக்கம் காட்டி வந்த மத்திய அரசு, தற்போது சுப்ரீம் கோர்ட்டின் கெடுவுக்கு பணிந்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெடு முடிவதற்கு முதல் நாள் அதாவது நேற்று முன்தினமே கெஜட்டில்(அரசிதழில்) வெளியிட்டு விட்டது.


எனவே இனிமேல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்கவே முடியாது. அப்படி ஒரு உத்தரவாதம் தமிழகத்திற்கு கிடைத்து விட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டு விட்டதால் தமிழக மக்களும், டெல்டா விவசாயிகளும், அ.தி.மு.க.வினரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறார்கள். இது தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதாவும் கூறி உள்ளார். இப்போதுதான் தனக்கு மன நிறைவாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றியை அ.தி.மு.க. வினரும், விவசாயிகளும் பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.


தமிழகத்திற்கு இந்த விஷயத்தில் நீதி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி விட்டதால் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்படும். அல்லது காலாவதியாகி விடும். புதிதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். எனவே இனிமேல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தியே ஆக வேண்டும். அதன்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எனவே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியானதால் தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், அ.தி.மு.க.வினர் என பலதரப்பட்ட மக்களும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையிலேயே கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மறுக்க முடியாது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தற்போது தண்ணீர் கொடுத்து வந்த கர்நாடகம், பல சமயங்களில் அதையும் கூட கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்தது.
ஆனால் இனி அப்படி நடக்காது. நடக்கவும் முடியாது.

அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Thanks : Thinabhoomi News

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக