Pages

திங்கள், 10 ஜூன், 2013

மாகாண முறையை எதிர்த்து வழக்கு; அடுத்தவாரம் தாக்கல்செய்ய சிங்கள பேரினவாதக் கட்சிகள் முடிவு










e-உதயன் :
-------------------

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றுகோரி உயர்நீதிமன்றில் அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய கடும் போக்குடைய சிங்கள தேசிய அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
 
பல சிங்கள அமைப்புகள் கூட்டாக இணைந்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ள வழக்கில்,
 
"1987- 88 காலப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. 
 
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்தவேளையில், அதை ஒன்பது பேரடங்கிய நீதியரசர் குழாமொன்று ஆராய்ந்தது. 
 
குறித்த வழக்கு தொடர்பிலான தீர்ப்பு தனித்தனியாகவே வழங்கப்பட்டது. ஐவர் அதற்கு சார்பாகவும் நால்வர் எதிராகவும் தீர்ப்பை வழங்கிருந்தனர்.  
 
எனினும், இது விடயத்தில் உயர்நீதிமன்றின் ஒட்டுமொத்த   வியாக்கியானம் என்னவென்பது இன்னும் தெரியாமல் உள்ளது. 
 
அதேவேளை, ஜே. ஆர். ஜெயவர்த்தன அழுத்தங்களைப் பிரயோகித்து அன்று தனக்கிருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பயன்படுத்தியே இதை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியிருந்தார்.
 
"இது விடயத்தில் இறைமைக்கு உரித்தான மக்களின் அபிப்பிராயம் கேட்டறியப்படவில்லை. எனவே,  இலங்கை  இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபை முறைமையில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும்'' என்று கோரப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது. 
 
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று அண்மைக்காலமாக கடும் போக்குடைய சிங்களக் கட்சிகள் கூறிவருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே மாகாண சபை முறைக்கு எதிராக வழக்குத் தொடர அவை முடிவெடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக