Pages

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள குர்ஷித் இலங்கை செல்கிறார்.



காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள

குர்ஷித் இலங்கை செல்கிறார் : மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

இலங்கையில் வரும் 15ம் தேதி நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் இந்திய குழுவினர் கலந்து கொள்கிறார்கள். மத்திய அரசு நேற்று இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரிட்டனின் காலனியாக இருந்து சுதந்திரம் அடைந்த 53 நாடுகள் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 1971ம் ஆண்டு முதல் காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 23வது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் வருகிற 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், சிறைபிடிப்பு ஆகிய சம்பவங்களை காரணம் காட்டி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என தமிழக கட்சிகள் கூறி வருகின்றன. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் அமைச்சர்களும் பிரதமர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனினும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை, பிரதமரை வலியுறுத்தி வந் தது. இந்நிலையில், இலங்கை மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான இந்திய குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசு தரப் பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செயலர்  கூறுகையில், காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வார்கள்’ என்று அறிவித்தார்.

எனினும், காமன்வெல்த் மாநாட்டு தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வாரா என்பது குறித்து  இன்னும் முடிவெடுக்கவில்லை. மாநாட்டில் பங்கேற்க குர்ஷித்தை அனுப்பு வது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று கடிதம் அனுப்புவார் என தெரிகிறது. கடந்த 1993ம் ஆண்டு முதல் நடைபெற்ற 10 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் 5 முறை மட்டுமே பிரதமர் கலந்து கொண்டுள்ளார். 4 மாநாட்டில் அமைச்சர்கள் தலைமையிலும், ஒரு மாநாட்டில் துணை ஜனாதிபதி தலைமையிலும் இந்திய குழுவினர் கலந்து கொண்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார் என்று மத்திய அரசு நேற்று இரவு வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக