Pages

புதன், 13 நவம்பர், 2013

மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து விட்டது - சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேச்சு






காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித் பங்கேற்பு:

மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து விட்டது

சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு


சென்னை, நவ.13-

காமன்வெல்த் மாநாட்டில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்பதன் மூலம் மத்திய அரசு தமிழர்களை மீண்டும் வஞ்சித்து விட்டதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சிறப்பு கூட்டம்

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன், முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தின் மீது அவர் கூறியதாவது:-

“நெஞ்சு கொதிக்கும் அளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும், ஓராயிரம் செய்திகள் வருகின்றன இலங்கை தமிழர் படும் அவதிகள் பற்றி” என்று 1958-ம் ஆண்டே குறிப்பிட்ட பேரறிஞர் அண்ணா, உலகில் தமிழர்கள் எங்கு பாதிப்புக்கு உள்ளானாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு என்ற கருத்தையும் நமக்கு வழிகாட்டியாக விட்டுச்சென்றுள்ளார்.


பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கேற்ப, இலங்கை தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு.

2011-ம் ஆண்டு மே மாதம் நான் மூன்றாவது முறையாக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன், போர்க்குற்றங்களை, இனப்படுகொலையை நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்துவதோடு, இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்னும் தீர்மானம் என்னால் 8.6.2011 அன்று இந்த மாமன்றத்தில் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நட்பு நாடு???

இதனை தொடர்ந்து, இலங்கை நாட்டை ‘நட்பு நாடு’ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்; இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்திடவும், ‘தனி ஈழம்’ குறித்து பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய பேரரசை வலியுறுத்தி இந்த மாமன்றத்தில் என்னால் 27.3.2013 அன்று முன்மொழியப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு நவம்பர் மாதம், இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும், காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்கு கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கிவைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பேரரசை வலியுறுத்தி இந்த மாமன்றத்தில் என்னால் 24.10.2013 அன்று முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காமன்வெல்த் மாநாடு

இதுதவிர, இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் 25.3.2013 அன்று பிரதமரை கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டேன். இதனை தொடர்ந்து 17.10.2013 அன்று மீண்டும் ஒரு கடிதத்தினை பிரதமருக்கு எழுதினேன்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வினை இந்திய பேரரசுக்கு தெரிவிக்கும் வகையில், கடந்த 2½ ஆண்டுகளில், இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து மூன்று தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உணர்வுப்பூர்வமான இலங்கை தமிழர்கள் பிரச்சினையை, அறிவுப்பூர்வமாக சிந்தித்து இந்த தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இவை உணர்ச்சிவயப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அல்ல. ஆனால், இதுநாள்வரை தமிழர்களுக்கு சாதகமான எந்தவொரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இனப்படுகொலை

மாறாக, தமிழின படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அரசு கொழும்புவில் நடத்தும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமருக்கு பதிலாக, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1993-ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற 10 காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாடுகளில், ஐந்து மாநாடுகளில் இந்தியாவின் சார்பில் பிரதமர் கலந்து கொள்ளாததை வைத்துப்பார்க்கும்போது, தற்போதைய மத்திய அரசின் முடிவு வழக்கமான ஒன்றாக இருக்கிறதே தவிர, தமிழர்களுக்கு ஆறுதல் தரக்கூடியதாகவோ, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதாகவோ இல்லை. மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். இவ்வாறு, கலந்துகொள்வதன் மூலம், இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை மனிதநேயம் அற்ற செயலை இந்தியா ஏற்றுக்கொள்கிறது, அங்கீகரிக்கிறது என்ற நிலை தான் உருவாகும்.

உச்சகட்டப் போர் முடிந்து, நான்கு ஆண்டுகள் கடந்துள்ள சூழ்நிலையில், இலங்கை வாழ் தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரப்படவில்லை. இன்னமும், இலங்கை ராணுவம் அவர்களை கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்கள் வசிக்கின்றனர். இடம் பெயர்ந்த தமிழர்கள், இன்னமும் இடம் பெயர்ந்த தமிழர்களாகவே இருக்கக்கூடிய அவல நிலை அங்கு நிலவுகிறது. தொடர்ந்து பல்வேறு இன்னல்களை இலங்கை தமிழர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக் கப்பட்ட மாகாண அரசுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள், இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. அதற்காக, எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தலைவர் பதவி

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு சமம் ஆகும். இது மட்டுமல்லாமல், இந்த பங்கேற்பின் மூலம், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர் பதவியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை அதிபர் வகிக்கக்கூடிய நிலைக்கு ஆதரவு அளித்த அவப்பெயரையும் இந்தியா அடைந்துவிடும்.

காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்க வழி வகுத்துள்ள மத்திய அரசின் முடிவு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.

வஞ்சித்துவிட்டது

தமிழினத்தை அழிப்பதற்காக சிங்கள இனவாத அரசுக்கு ஆயுதம் அளித்து, பயிற்சி அளித்து பல துரோகங்களை இந்திய பேரரசு இதுநாள் வரை செய்திருந்தாலும், இவற்றிற்கெல்லாம் பரிகாரம் தேடும் வகையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை, இனப்படுகொலை செய்தவர்களை, தண்டிக்க வழிவகுக்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் ஒருவர்கூட கலந்து கொள்ளப்போவதில்லை என்ற திடமான, உறுதியான முடிவை இந்திய பேரரசு எடுக்கும் என்று உலகத் தமிழர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர், இந்த மாமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால், மத்திய அரசு மீண்டும் தமிழர்களை வஞ்சித்துவிட்டது.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக