Pages

வியாழன், 7 நவம்பர், 2013

Chennai Metro மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்


7-NOV-2013

http://tamilepaper.blogspot.in/p/daily-thanthi_07.html


சென்னை நகரில் போக்குவரத்து வசதியை விரைவுபடுத்துவதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் ரூ. 14 ஆயிரத்து 600 கோடி செலவில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஏற்கனவே இயங்கி வரும் புறநகர் மின்சார ரெயில், பறக்கும் ரெயில் போல் அல்லாமல் மெட்ரோ ரெயில் நவீன வசதிகள் கொண்டது. முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகள், தானியங்கி கதவுகள், குஷன் இருக்கைகள் என சொகுசான பயணத்தை மெட்ரோ ரெயிலில் அனுபவிக்கலாம்.

வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும், சைதாப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் வரை மேம்பாலத்திலும் ரெயில்கள் ஓடும்.

இதே போல் மற்றொரு வழித்தடத்தில் சென்டிரலில் இருந்து திருமங்கலம் வரை சுரங்கப்பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை மேம்பாலத்திலும் ரெயில்கள் ஓடும்.
சுரங்கப் பாதையில் உள்ளேயே ரெயில் நிலையங்களும், மேம்பாலத்தில் மேலேயே ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற நவீனமான இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தை சென்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்பேடு – பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2015–ம் ஆண்டில் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கி விடும்.

மெட்ரோ ரெயில்களை நிறுத்தி வைக்கவும், பராமரிக்கவும் கோயம்பேட்டில் பிரமாண்டமான பணிமனை அமைக்கப்பட்டு தண்டவாளங்களும், ஷெட்டுகளும் போடப்பட்டுள்ளன.

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகள் கடந்த ஜூலை மாதம் சென்னை வந்து சேர்ந்தது. அந்த ரெயில் பெட்டிகள் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலை இயக்குவதற்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. ரெயில் பெட்டிகளின் தரம் பாதுகாப்பு இயக்கம் போன்ற சோதனையிடப்பட்டன.
பிரேசில் நாட்டு பொறியாளர்கள் தங்கள் ஆய்வுப் பணியை சென்னை மெட்ரோ ரெயில் பொறியாளர்களுடன் இணைந்து செய்தனர். ரெயில் என்ஜின்களை இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மெட்ரோ ரெயிலின் முறைப்படியான சோதனை ஓட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிகாரிகளும், ஊழியர்களும், பணியாளர்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


தொடக்க விழா நடந்த இடத்தில் எளிமையான முறையில் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அங்கு வந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை மெட்ரோல் ரெயில் திட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மெட்ரோ ரெயில் இயங்கும் முறை மற்றும் நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.


முதல் – அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் 4 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கியது. பணிமனையில் அமைக்கப்பட்டு இருந்த 800 மீ.தூர தண்ட வாளத்தில் ஓடி நின்றது.
சோதனை ஓட்டத்துக்காக மெட்ரோ ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கோயம்பேடு பணிமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு வேலிக்கு வெளியே மெட்ரோ ரெயில் ஓடுவதை காண ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். பணிமனை பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் உள்ளே மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

( MaalaiMalar News )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக