Pages

புதன், 29 ஜனவரி, 2014

2014: தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள்

http://www.dailythanthi.com/2014-01-27--delhi-mp-poll-petition-filing-completed-6-selected-as-unopposed-admik-4-dmk-1-cpm-1



டெல்லி மேல்–சபையில் தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் (ராஜ்ய சபா எம்.பி.) பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவு பெறுகிறது.
அந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7–ந்தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.

டெல்லி மேல்–சபை எம்.பி.க்களை மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இதன்படி இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக அ.மு.பி.ஜமாலுதீன் (தமிழக சட்டசபை செயலாளர்), தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக அ.வீரராஜேந்திரன் (சட்டசபை துணைச்செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

வேட்புமனு தாக்கல்
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா, அந்த கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் மேட்டூரைச்சேர்ந்த கே.பத்மராஜன், வீரவன்னியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பி.என்.ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.

27–ந்தேதி அன்று அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் முடிந்தது
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். பிற்பகல் 3 மணிக்கு மனு தாக்கல் முடிவடையும் வரை நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. இதுபற்றி தேர்தல் அதிகாரி கூறியதாவது:–
29–ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். அப்போது வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிந்தவரோ அல்லது ஏஜெண்டோ இருக்க வேண்டும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

பரிசீலனைக்கு பின்னர், விதிகளின்படி தாக்கல் செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 31–ந் தேதி பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


போட்டியின்றி தேர்வு
தற்போது 2 சுயேச்சை மனுக்களை சேர்த்து 8 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு சுயேச்சை வேட்பாளர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியவில்லை என்பதால் 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


அந்த சூழ்நிலையில் அ.தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் டி.கே.ரெங்கராஜன் ஆகிய 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள். 6 உறுப்பினர் பதவிக்கு 6 வேட்புமனுக்கள் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் ஓட்டுப்பதிவு நடைபெறாது. அந்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர். 31–ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான சான்றிதழ்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வழங்குவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக