Pages

வியாழன், 2 ஜனவரி, 2014

சமையல் கியாஸ் விலை அதிரடி உயர்வு சிலிண்டருக்கு ரூ.220 உயர்ந்தது !

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை, அதிரடியாக சிலிண்டருக்கு ரூ.220 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. 



 புதுடெல்லி, ஜன.2- தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும். அதிரடி விலை உயர்வு இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இதுவரை ரூ.1021-க்கு விற்கப்பட்டு வந்த கியாஸ் சிலிண்டரின் விலை, ரூ.1241 ஆகவும், மும்பையில் ரூ.1038-ல் இருந்து ரூ.1264.50 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.


  3-வது முறையாக இந்த விலை உயர்வை தொடர்ந்து சென்னையில் இதுவரை ரூ.1014-க்கு விற்கப்பட்டு வந்த மானியம் இல்லாத சிலிண்டரின் (14.2 கிலோ) விலை ரூ.1234 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இது 3-வது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 1-ந்தேதி அன்று சிலிண்டருக்கு 63 ரூபாய் உயர்த்தப்பட்டது. கியாஸ் விற்பனையாளர்களுக்கு கமிஷன் தொகை உயர்ந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 11-ந்தேதி அன்று கியாஸ் சிலிண்டரின் விலை, சிலிண்டருக்கு ரூ.3.50 உயர்த்தப்பட்டது. தற்போது 3-வது முறையாக புத்தாண்டு தினமான நேற்று சிலிண்டருக்கு ரூ.220 அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.


பெரிய அளவில் பாதிப்பு 


 ஏற்கனவே பொது மக்களுக்கு தேவையான அளவில் மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை சரிக்கட்டுவதற்காக கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று உச்சவரம்பு விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2013) ஜனவரி மாதத்தில் மானிய சிலிண்டரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 9 ஆக அதிகரிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பல குடும்பங்களில் அதைவிட அதிக எண்ணிக்கையில் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புத்தாண்டு தினமான நேற்று அதிரடியாக சிலிண்டருக்கு ரூ.220 உயர்த்தி இருப்பது அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக