Pages

வெள்ளி, 28 மார்ச், 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது U.N. Approves Investigation of Civil War in Sri Lanka



இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன

போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.


ஜெனீவா, மார்ச்.28-

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

போர்க்குற்றங்கள்

அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஜெனீவா நகரில் உள்ள, 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கனவே தொடர்ச்சியாக 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் கொண்டு வந்த தீர்மானங்கள் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறின.

அமெரிக்கா தீர்மானம்

இந்த நிலையில், 2009-ம் ஆண்டில் போர் முடிவுற்ற போதிலும் அங்கு இதுவரை மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு தவறி விட்டது என்றும், இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25-வது கூட்டத்தொடரில் அமெரிக்கா புதிதாக ஒரு வரைவு தீர்மானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. இங்கிலாந்து, மான்டினெக்ரோ, மாசிடோனியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.

இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள், அது தொடர்பாக நடைபெற்ற குற்றங்கள் ஆகியவை பற்றி சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

நவி பிள்ளை அறிக்கை தாக்கல்

இந்த நிலையில், இலங்கைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை நேற்று முன்தினம் கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையிலும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி நம்பத்தகுந்த சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தர தூதர் ரவிநாத ஆர்யசிங்கா இதை நிராகரித்தார்.

விவாதம்

இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது உறுப்பு நாடுகளின் விவாதம் நடைபெற்றது.

அப்போது இந்த தீர்மானத்தை இலங்கை கடுமையாக எதிர்த்தது. ரஷியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளின் உறுப்பினர்கள் நவி பிள்ளையின் அறிக்கையை கடுமையாக விமர்சித்து பேசினார்கள். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளின் உறுப்பினர்கள் நவி பிள்ளையின் அறிக்கையையும், அமெரிக்க தீர்மானத்தையும் ஆதரித்து பேசினார்கள்.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் நேற்று அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஓட்டெடுப்பில் வெற்றி

தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட 23 நாடுகளின் உறுப்பினர்கள் வாக்கு அளித்தனர். தீர்மானத்துக்கு எதிராக ரஷியா, சீனா, பாகிஸ்தான், கியூபா, வெனிசூலா, பெலாரஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளின் உறுப்பினர்கள் வாக்கு அளித்தனர்.

இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.

இதனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் 11 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது.

இந்தியா புறக்கணித்தது ஏன்?

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா ஏற்கனவே கொண்டு வந்த தீர்மானங்களை, இந்தியா ஆதரித்து ஓட்டுப்போட்டது.

ஆனால் இந்த தடவை அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. அதேசமயம் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இது இலங்கைக்கு ஆதரவான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

ஓட்டெடுப்பை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திலீப் சின்கா கூறியதாவது:-

இறையாண்மை

இலங்கைக்கு எதிராக இதற்கு முன்பு 2009-ம் ஆண்டிலும் அதன்பிறகு தொடர்ச்சியாக 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போல் அல்லாமல், இப்போது கொண்டு வந்த தீர்மானத்தில் அங்கு நடந்த மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா? என்பதை அறிய சர்வதேச அளவிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இது அந்த நாட்டுக்கு அறிவுறுத்தல் செய்யப்படுவதாகவும், அந்த நாட்டின் இறையாண்மையை பற்றி குறைத்து மதிப்பிடுவதாகவும் உள்ளது.

ஒரு நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க திறந்த மனதுடனும், ஒத்துழைப்புடனும், ஆக்கபூர்வமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அப்படி அல்லாமல் வெளியே இருந்து நடத்தப்படும் விசாரணை ஆக்கபூர்வமான பயனுள்ள அணுகுமுறையாக இருக்காது என்று முந்தைய ஐ.நா.பொதுச்சபை தீர்மானங்களில் கூறப்பட்டு இருக்கிறது.

அரசியல் தீர்வு

இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததன் மூலம் அந்த நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. போர்ப்படிப்பினை குழு வழங்கிய சிபாரிசுகளை உரிய காலத்தில் ஆக்கபூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

இவ்வாறு திலீப் சின்கா கூறினார்.

இலங்கைக்கு நெருக்கடி

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை கவுன்சில் 2009-ம் ஆண்டிலும், பின்னர் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும், அதன்பிறகு தற்போதும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு உள்ளது.

போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் தற்போது நிறைவேறி இருப்பதால், இலங்கைக்கு நெருக்கடி முற்றி இருக்கிறது. அதாவது, மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணை குழு அமைக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுடன் இலங்கை ஒத்துழைத்து செயல்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக