Pages

திங்கள், 14 ஏப்ரல், 2014

“காவிரி பிரச்சினையில் இரு கட்சிகளும் ( காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் ) தமிழக மக்களை வஞ்சிக்கின்றன”




கரூர் தொகுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவிரி பிரச்சினையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே தமிழக மக்களை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 
கரூர், ஏப்.14- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று, கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மு.தம்பிதுரையை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.ராயனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- காவிரி பிரச்சினைதமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


1998-ம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து, மத்திய கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றது. அப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை வரப்பெறவில்லை. இடைக்கால ஆணை தான் அமலில் இருந்தது.காவிரி ஆணையம் அந்த இடைக்கால ஆணையை செயல்படுத்த அதிகாரிகள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பிற்கு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துகின்ற அதிகாரம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அணைகளை இயக்கும் அதிகாரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் நான் கோரிக்கை வைத்தேன்.அதை செய்வதற்கு பதிலாக அன்றைய பாரத பிரதமர் வாஜ்பாய், இந்திய பிரதமரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட 4 மாநில முதல்-அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். இதனை, அப்போதே நான் எதிர்த்தேன். விலகியது ஏன்?இப்படிப்பட்ட ஓர் ஆணையத்தால் எந்த பயனும் இருக்காது என்று உணர்ந்ததால் தான் அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அதிகாரம் படைத்த அதிகாரிகள் குழுவை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு அமைக்க மறுத்ததால் தான், இனி அந்த அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதால் தான், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து அ.தி.மு.க. விலகி கொண்டதோடு, அந்த பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் 1999-ம் ஆண்டு நான் திரும்ப பெற்றேன். அப்போது, தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்றுவந்தது. அந்த தருணத்தில் பா.ஜ.க. கருணாநிதியை அணுகி காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றது. இதனைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த தி.மு.க. மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. நான் தெரிவித்தது போலவே காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்கு நீதி வழங்கப்படவே இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் காவிரி நதிநீர் ஆணையத்தால் மேற்கொள்ள இயலவில்லை. அந்த அமைப்பால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. 


தமிழக மக்கள் வஞ்சிப்பு 

 கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும், ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு சம அளவிலேயே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. ஆனால், 

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் 

காங்கிரஸ் கட்சியாலும், பா.ஜ.க.வாலும் 

ஆட்சி அமைக்கவே முடியாது. 

 தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பா.ஜ.க.வாலும் ஆட்சி அமைக்க முடியாது.எனவே தான், மத்தியில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் இரு கட்சிகளிடையே வேறு எந்த பிரச்சினைகளில் மாறுபாடு இருந்தாலும், வேறு எது எப்படி இருந்தாலும் காவிரி நதிநீர் பிரச்சினையை பொறுத்தவரை பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே விதமான கொள்கையைத்தான் கடைபிடித்து வருகின்றன. 

தமிழ்நாட்டை, தமிழக மக்களை இரு கட்சிகளுமே வஞ்சித்து வருகின்றன. அதை போலவே, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், வேறு எதில் அவை மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக்கூடாது என்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன, தீவிரமாக செயல்படுகின்றன. எனவே, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வாக்காள பெருமக்களாகிய நீங்கள், நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்க கூடாது என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்; ‘டெபாசிட்’ இழக்க வேண்டும்

காவிரி நதிநீர் பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பா.ஜ.க. வேட்பாளர்களையும், இந்த தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பா.ஜ.க. தலைவர்கள் இதைப்பற்றி எதுவும் பேசுவதில்லை. பா.ஜ.க. தலைவர்கள் தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறந்து விடுவதாக சொன்னாலே, கர்நாடக மாநிலத்தில், பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடுகிறோம் என்று பா.ஜ.க. சொன்னாலே கர்நாடகத்தில் இந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. எனவே, இதைப்பற்றி பா.ஜ.க.வினர் எதுவுமே பேச மாட்டார்கள்.பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ, டாக்டர் ராமதாஸ் மற்றும் இதர கட்சியினர் நமக்குரிய காவிரி நதிநீரை பெறுவதற்கு பா.ஜ.க.விடம் இருந்து என்ன உத்தரவாதத்தினை பெற்றுள்ளனர்?. 

அவர்கள் தமிழக மக்களுக்கு அதனை தெரிவிக்க வேண்டும். நமக்குரிய காவிரி தண்ணீரை அளிக்காமல், நம்மை ஏமாற்றியது தான் கடந்த கால வரலாறு. நமக்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் நம்மை வஞ்சித்தது தான் கடந்த கால அனுபவம். தமிழகத்திற்கு துரோகம்எனவே, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் நமது ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினையில் எந்த தீர்வையும் காண முடியாது. அவர்களால், நமக்குரிய காவிரி தண்ணீரை பெறவே இயலாது. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியானால், பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் நமக்குரிய காவிரி நதிநீர் கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்களா? இதைவிட பெரிய துரோகம் வேறு என்ன இருக்க முடியும்? இதைவிட பெரிய துரோகம் இருக்க முடியுமா?. வாக்காளப் பெருமக்களே. காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் 

காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. மற்றும் 

அதன் கூட்டணி கட்சிகளை வரும் 

மக்களவை பொதுத்தேர்தலில் நீங்கள் 

படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக