Pages

சனி, 17 மே, 2014

2014 : BJP Wins_Modi as PM இந்தியா : வடக்கே பிஜேபி வெற்றி ! மோடி பிரதமர்





பாராளுமன்ற தேர்தலில் 283 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
புதுடெல்லி, மே.17-இந்திய ஜனநாயகத்தின் திருக்கோவில் என்று வர்ணிக்கப்படக்கூடிய பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்தன.

பெரும் எதிர்பார்ப்பு

இந்த தேர்தல் முடிவுகளை நமது நாடு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தன. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 989 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட உடன் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஒரு சில மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலை பெற்று வெற்றி முகம் காட்டத்தொடங்கின.


தமிழ்நாடு, புதுச்சேரி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆரம்பம் முதல் முன்னணி பெற தொடங்கினார்கள்.தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 இடங்களில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.இதே போன்று கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியும், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும் முன்னிலை பெற தொடங்கியது.


தலைவர்கள் வெற்றி

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வதோதரா, வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து வாரணாசியில் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவினார். 

பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் (லக்னோ), அதன் முன்னணி தலைவர்கள் அத்வானி (காந்திநகர்), சுஷ்மா சுவராஜ் (விதிஷா), உமாபாரதி (ஜான்சி), நிதின் கட்காரி (நாக்பூர்), டாக்டர் ஹர்சவர்தன் (சாந்தினி சவுக்), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) உள்பட பலர் அபார வெற்றி பெற்றனர்.இதே போன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (ரேபரேலி), துணைத்தலைவர் ராகுல் காந்தி (அமேதி), சசி தரூர் (திருவனந்தபுரம்), வீரப்ப மொய்லி (சிந்துவாரா), மல்லிகார்ஜூன கார்கே (குல்பர்கா), சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி, அசம்கார்), வெற்றி பெற்றனர்.


கைகொடுத்த உ.பி.

இந்த தேர்தலில் உத்தரபிரதேசம் பாரதீய ஜனதாவுக்கு கைகொடுத்தது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கணிப்பு, இம்முறையும் உண்மையாகி உள்ளது. இங்கு பாரதீய ஜனதா கட்சி 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.

பீகார், அரியானா

ஐக்கிய ஜனதாதளத்தின் ஆட்சி நடக்கிற பீகாரிலும், காங்கிரஸ் ஆட்சி நடக்கிற அரியானாவிலும் கூட பாரதீய ஜனதா நல்லதொரு வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று வட மாநிலங்களில் சத்தீஷ்கார், ஜார்கண்ட், மத்தியபிரதேசம் மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சி கணிசமான வெற்றி கண்டுள்ளது.
 


இறுதி நிலவரம்

முடிவில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 285 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. 1984-ம் ஆண்டுக்கு பிறகு இனி இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் என்ற அரசியல் வல்லுனர்களின் கணிப்பை பொய்யாக்கி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

பாரதீய ஜனதா கூட்டணி 335 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ள மொத்த இடங்கள் 62. இவ்விரு கட்சிகளையும் சாராத பிராந்திய கட்சிகள் 147 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.மோடி பிரதமர் ஆகிறார்அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டபடி நரேந்திர மோடி பிரதமர் ஆகிறார். அவருக்கு பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இந்த வெற்றியை நாடு முழுவதும் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக