Pages

ஞாயிறு, 25 மே, 2014

2014 : Tamil National Alliance Seeks Date with Modi மோடியோடு நெருங்கிப் பணியாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு விருப்பு; வாழ்த்துக் கடிதத்தில் சம்பந்தன்


இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடியோடு நெருக்கமாகப் பணியாற்ற இதய சுத்தியோடு காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

அத்தோடு மோடியையும் அவரது அரசில் பங்கெடுப்பவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை எமக்கு விரைவாக ஏற்படுத்தித் தரவேண்டும் என நாம் வேண்டுகின்றோம்.

இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கா கவும், பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்காகவும், இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் எங்களது மன மார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்களும் உங்களது அரசும் எடுத்திருக்கின்ற கடினமான பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் எங்களது இதயபூர்வமான வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.

அனைத்து இலங்கை மக்களும், சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையில், தத்தமது பாரம்பரிய நிலங்களில் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையில் மீண்டும் வன்முறை தலைதூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நேர்மையான உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் உங்களது அரசோடு நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் இதய சுத்தமாகக் காத்திருக்கின்றோம்.

1983ஆம் ஆண்டின் தமிழர் எதிர்ப்பு படுகொலைகளின் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு நிரந்தரத் தீர்வை கொண்டு வருவதற்காக இந்தியா எடுத்த முயற்சிகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தது.

காலத் துக்குக் காலம் இடையூறுகள் ஏற்பட்டபோதும் இந்த முயற் சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தியா, ஒரு தனித்துவமான பாத்திரத்தை இந்த முயற்சிகளில் வகித்து வந்திருக்கின்றது.

2009 மே மாதத்தில் ஆயுதப் போர் தோற்கடிக்கப்பட்டு வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக, சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு ஒன்றை தேசிய இனப்பிரச்சினைக்குக் காண்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின. ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியற் தீர்வை தான் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியை போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவிற்குப் பின்னாலும் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசு வழங்கியிருந்தது.

ஆனாலும், தனது அந்த வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசு நடக்கவில்லை.
மாறாக கடும்போக்கான ஓர் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு முனைப்பாக முன்னெடுத்து வருகின்றது.

அதன்படிக்கு,
1. தங்களது வாழ்விடங்களாகவும், வாழ்வாதார இடங்களாகவும் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த இலங்கையின் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற வளமும் பெறுமதியும் மிக்க பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் அரசால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

தமது சொந்த நிலங்களுக்கு மீளச்செல்ல முடியாமல் அது தமிழ் மக்களைத் தடுத்திருக்கின்றது. மக்களிடம் அவர்களது வாழ்விடங்களை மீளக்கையளிப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறுகிறது.

இதன் மூலம், தமிழ் மக்களைப் படுமோசமான ஒரு வாழ்நிலைக்குள் அது தள்ளியுள்ளது.

2. வடக்கு கிழக்கு பிராந்தியத்தின் இனப்பரம்பல் முறைமையினை மாற்றியமைக்கும் நோக்குடன், நில ரீதியான அரச உதவிகளை வழங்கி, பெரும்பான்மை இன மக்களை அரசு அங்கு முனைப்போடு குடியேற்றுகிறது.

3. வடக்கு கிழக்கில் இருக்கின்ற இந்துத் தமிழ் மக்களுக்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்றுநிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் அடிப்படையான மாற்றங்களை அரசு செய்கிறது.

4. மிகப் பெருவாரியான மக்களால் ஜனநாக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசான, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் கொழும்பு அரசு போட்டு வருகிறது.

5. வடக்கு கிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் தொடர்சியாக மீறுவதன் மூலம், சட்டத்திற்கு முன்னால் அவர்களுக்கு நீதியை நிராகரித்து, அவர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அரசு தரம் தாழ்த்துகிறது.

6. வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் தொகையின் விகிதாசார அளவீட்டிற்கு மிக அதிகப்படியான அளவில் இருக்கின்ற இராணுவத்தின் ஆக்கிரமிப்பு பிரசன்னம், இராணுவத்திற்காக நிர்மானிக்கப்படுகின்ற நிலையான வீட்டுவசதிக் கட்டுமானங்கள், சாதாரண மக்களது வாழ்வின் மீது இடப்படுகின்ற பாரதூரமான இடையூறுகள், பெண்கள் மீதான வன்முறைகள், விவசாயம், மீன்பிடி, வணிக நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றமை என்பன பாரதூரமான எதிப்புணர்வு மிக்க தாக்கங்களை மக்களின் மனங்களில் ஏற்படுத்துகின்றன.

இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி ஏற்படும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்துவன மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து வளரச் செய்யும். இத்தகைய ஒரு நிலைமையைத் தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதில் அது விசுவாசமாக இல்லை என்பதையே தெளிவாகக் காட்டுகின்றன என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த விடயங்களை முடிந்தளவு விரைவாக உங்களது கவனத்திற்கு கொண்டுவருவது எங்களது கடமைப்பாடு என்று நாங்கள் கருதுகின்றோம். நாங்கள் அப்படி கருதுவது ஏனென்றால் நீதியினதும் சமத்துவத்தினதும் அடிப்படையிலான கெளரவமான ஒரு சமாதானம் எங்கள் நாட்டில் உருவாகும் என்றும் பாரத தேசம் வகிக்கின்ற பாத்திரம் அதனை உறுதிப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றமையால் ஆகும்.

உங்களையும் உங்கள் அரசில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை உங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக எமக்கு வழங்குமாறும் நாம் வேண்டுகின்றோம். என்றுள்ளது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=722693044625388252#sthash.yIsPlBfa.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக