Pages

திங்கள், 12 மே, 2014

2014 - முள்ளிவாய்க்கால் நினைவு தினம்- யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் திட்டவட்டம்!!




Banner

அரச தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் மே 18ஐ  நினைவு தினத்தினை நினைவுகூர வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'அன்பான எம் உறவுகளே. மே மாதம் என்றதும் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக தமது உயிர்களைக் காவு கொடுத்த அந்தக் காட்சிகளே எமது மனதின் முன் தோன்றும். பலர் எம் கண் முன்னாலும் இன்னும் பலர் எவ்வாறு என்று தெரியாமலும் தமது உயிர்களைக் காவு கொடுத்தனர்.

இக்கொடூரக் காட்சிகளை இதயமுள்ள எவருமே மறக்கமாட்டார்கள். இலங்கையில் இவ்வாறு பல தடவைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குச் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு காட்டப்படவில்லை. ஆனால் 2009 மே மாதம் வன்னியில் நடந்தது போல் எந்தவொரு காலகட்டத்திலும் நடந்ததில்லை.

இங்கு குழந்தைகள், சிறுவர்கள் சிறுமியர்கள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், இளைஞர்கள் என எந்தவொரு பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடித்து மாண்டனர்.

எனவே மே மாதம் என்பது சொல்லொணாத் துன்பங்களை நாம் அனுபவித்த துன்பங்களில் மாதங்களில் மிகவும் துயரம் மிகுந்த மாதமாகும்.

எம்மவர்கள் மறைந்ததையிட்டு அவர்களின் இறுதிச் சடங்குகளைக்கூட நாம் செய்ய முடியவில்லை. எம்மவர் ஒருவர் இறந்துவிட்டால். வருடா வருடம் திவசம் செய்வோம். இதை அவர்கள் இறந்த திதியில் தான் செய்வோம்.

ஆனால் ஒருவர் இறந்த திதி தெரியாவிட்டால், நாம் மாயம் என்ற ஒன்றைப் பயன்படுத்தி ஒரே நாளில் செய்வோம்.அதேபோல் வன்னியில் இறந்த எமது உறவுகளுக்காக ஒருநாள் பிரார்த்திப்போம். இது இலங்கையின் சட்டத்திற்கு முரணானதொன்று இல்லை. நாம் இலங்கையின் சட்டங்களை மதிப்போம். நாம் இலங்கையின் சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை எங்கும் நினைவு கூருவோம்.

வீடுகள், பாடசாலைகள், கோவில்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். எந்தவொரு கட்டத்திலும் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடாது பிரார்த்திப்போம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலாலியினில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி நடத்திய சந்திப்பினில் பல்கலைக்கழக சமூகத்தினை இவ்வாறான நினைவு கூரல்களை நடத்தக்கூடாதென மிரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Banner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக