Pages

வியாழன், 10 ஜூலை, 2014

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு




ஆயுள் தண்டனை கைதிகளை மாநில அரசுகள் முன்கூட்டியே விடுவிக்க தடைவிதித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் அனுமதியை பெறுவது தொடர்பாக பதில் அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவை ஜனாதிபதி பரிசீலிப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தை காரணம் கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18ம் தேதி குறைத்தது. இதையடுத்து ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு கடந்த பிப்ரவரி 19ம் தேதி முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு மனு செய்தது. ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கும் விஷயத்தில் தமிழக அரசு பின்பற்றிய நடைமுறையில் குறைபாடு உள்ளது என தெரிவித்த உச்சநீதிமன்றம், ராஜிவ் கொலை குற்றவாளிகள் அனைவரையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்து, இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்ச்க்கு மாற்றவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நேற்று விசாரித்தது. இதில் நீதிபதிகள் ஜே எஸ்.கேஹர், ஜே.சலமேஸ் வர், ஏ.கே.சிக்ரி, ரோகின்டன் நரிமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். செங்கோட்டை தாக்குதல் உட்பட மற்ற ஆயுள் தண்டனை கைதிகளின் வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. புதிய மத்திய அரசின் சார்பில் தற்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘‘நாடு முழுவதும் ஆயுள் தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுவிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ராஜிவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால், ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது போல், நாளை பிற மாநில அரசுகளும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க முடிவு செய்யலாம். இதற்கு அனுமதிக்க கூடாது. தீவிரவாதிகள் விஷயத்தில் கருணை காட்டக் கூடாது’’ என்றார்.  மாநில அரசுகளின் அதிகாரத்தில், மத்திய அரசு தலையிடுவதை ஏற்க முடியாது என தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரித்த வழக்குகளில் ஆயுள்தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதில், மத்திய அரசின் அனுமதி தேவையா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் வரும் 18ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே மாநில அரசுகள் விடுவிக்க கூடாது எனவும்  உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக