Pages

புதன், 9 ஜூலை, 2014

சொந்த மண்ணில் பிரேசிலை தவிடுபொடியாக்கிய ஜேர்மனி இறுதிப் போட்டிக்குள்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணி பிரேஸில் அணியியை 7-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
 
இதன் மூலம் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஜேர்மனி. அந்த அணியின் முன்னணி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ் ஒரு கோல் அடித்து, உலகக் கிண்ண  போட்டிகளில் அதிக கோல்களை (16 கோல்கள்) அடித்த வகையில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

போட்டியின் ஆரம்பம் முதலே ஜேர்மனியின் அதிரடி காரணமாக இறுதிப்போட்டிக்கு செல்லும் பிரேசிலின் கனவு தகர்ந்தது.
ஜேர்மனி வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியே  காணப்பட்டது. வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தினை எதிர்கொள்ள முடியாது பிரேஸில் அணி வீரர்கள் திணறினர்.
 
உலக கிண்ண தொடரின் முதல் அரையிறுதியில் நட்சத்திர வீரர் நெய்மர், அணித்தலைவர் தியாகோ சில்வா இல்லாமல் உள்ளூர் பிரேசில் அணி, முல்லர், குளோஸ் என பலமான ஜேர்மனியை எதிர்கொண்டது. இது பிரேஸில் அணிக்கு பாரிய பின்னடைவாகவே அமைந்தது.
 
1975ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணி சொந்த மண்ணில் சர்வதேச போட்டி ஒன்றில் தோல்வியடைந்ததில்லை. ஆகவே அனைத்துமே பிரேசிலுக்குச் சாதகமான அறிகுறியாகவே இருந்தது. ஆனால் 11ஆவது நிமிடத்திலிருந்து, 29ஆவது நிமிடம் வரை 5 கோல்களை ஜேர்மனி திணிக்க ஒன்றும் புரியாமல் பிரேசில் எப்படி ஆடுவது என்பதையும் மறந்து போனது.
 
போட்டியின் 11ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணிக்கு கிடைத்த கோர்னர் வாய்ப்பில் அந்த அணியின் டோனி குரூஸ் அடித்த பந்தை நட்சத்திர வீரர் முல்லர் கோலாக மாற்றி அணியின் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார்.
 
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேர்மனி அணியின் குளோஸ் 23ஆவது நிமிடத்திலும், 24ஆவது நிமிடத்தில் டொனி குரூசும், 26 ஆவது நிமிடத்தில் மீண்டும் டொனி குரூசும், 29 ஆவது நிமிடத்தில் ஹேரிடாவும் கோல்களை பெற்றுக்கொள்ள ஜேர்மனி ஆட்டத்தின் முதல்பாதியில் 5-0 என்ற  கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
 
தொடர்ச்சியாக ஜேர்மனி வீரர்கள் கோல் அடித்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக் குதிக்க, அதிச்சியில் பிரேசில் அணியினரும் ரசிகர்களும் உறைந்து போயினர்.
 
சுவாரஸ்யம் இல்லாமல் ஆரம்பித்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய ஜேர்மனி வீரர்களிடம் இருந்து பந்தை தட்டிப்பறிக்க கூட முடியாமல் பிரேசில் வீரர்கள் தட்டுத்தடுமாறினர்.
 
இந்நிலையில் ஜேர்மனியன் சூரில் 69 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, வெறுத்துப்போன பிரேசில் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். தொடர்ந்து மிரட்டிய ஜேர்மனி அணிக்கு சூரில் 79 ஆவது நிமிடத்தில் 7ஆவது கோல் அடித்தார்.
போராடிய பிரேசில் அணியின் எல்லா கோல் முயற்சிகளையும் அசராமல் முறியடித்த ஜேர்மனி கோல் கீப்பர் மானுவல் நீயூர் 90 ஆவது நிமிடத்தில் பிரேசிலின் ஆஸ்கர் அடித்த பந்தை நழுவவிட்டார். இதனால் பிரேசில் அணிக்கு ஒரு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது.
இறுதியில் ஜேர்மனி அணி, 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு எட்டாவது முறையாக முன்னேறி புதிய உலக சாதனை படைத்தது. 
பிரேசில் அணி, தனது கால்பந்து வரலாற்றில் கடந்த 94 ஆண்டுகளில் இல்லாத அளவில் தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்துள்ளது. 
இதைத்தவிர கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பையும் பரிதாபமாக இழந்தது. இருப்பினும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரேசில் அணி இடம் பெற்றுள்ளது.
 
 
 ( Nanri : Virakesari )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக