Pages

சனி, 19 ஜூலை, 2014

Sinhala Only Act : இன உறவுகளைச் சிதைத்த "சிங்களம் மட்டும் சட்டம்"

இலங்கைத் தமிழர்களின் தலைவிதியையே மாற்றியமைத்த அந்த இருள் சூழ்ந்த தினத்தின் 58 ஆண்டுகள் பூர்த்தி இன்றாகும்.

அந்நியர் ஆட்சியின்போது ஒதுக்கி வைக்கப்படாது தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் கூனிக்குறுகி நிற்கும் வகையில் அடிமைச் சாசனம் ஒன்று எழுதப்பட்ட அந்த நாளை தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

சிங்கள இன வெறியர்கள். தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் காட்டிய இன மொழி வெறியின் பிரதிபலிப் பின் பயனாகவே சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்கும் வகையிலான சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்திலே 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி நிறைவேற்றி வைக்கப்பட்டது.

இலங்கை அரசின் சகல கருமங்களும் சிங்கள மொழியில் மட்டுமே இடம்பெற வேண்டுமென்ற இன வெறியர்களின் நீண்ட நாள் கனவு அன்றைய தினம்தான் நனவாக மாற்றம் பெற்றது.

லண்டனில் உயர்கல்வி கற்றவரும் சிறந்த பேச்சாளருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்க ஓர் இன வெறியராக மாறிய விந்தை இந்த நாட்டில்தான் நிகழ்ந்தது. முதலாளித்துவக் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சிக் கதிரையில் அமருவேன் என சூளுரைத்த பண்டாரநாயக்க அதற்கான ஆயுதமாக மொழி யையே பயன்படுத்தினார்.

நான் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைக்குமாயின் அடுத்த 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை இந்த நாட்டின் அரச கரும மொழியாக மாற்றிக் காட்டுவேன். சிங்கள பெளத்தர்கள் இந்த நாட்டின் முதல் குடிமக்களாக என்றுமே விளங்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அவர் சிங்கள மக்களின் மனங்களைக் கவரும் வகையில் உரையாற்றினார்.

பெரும்பான்மைச் சிங்கள மக்களும் அவரது கருத்துக்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். எதிர்காலத்தில் சிங்கள தமிழ் மக்களிடையே பண்டாரநாயக்காவின் கூற்றுக்கள் பெரும் முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்திவிடும் என்பதை அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.
தனிச் சிங்களச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு பிலிப் குணவர்த்தன போன்ற இனவாதிகள் தமது முழு ஒத்துழைப்பை நல்கினர்.

ஆனால் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த கலாநிதி என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஏ.விக்கிரமசிங்க போன்றவர்கள் சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென வாதாடி னர். ஆனால் இனவாதிகளின் செவிகளில் இவையயான்றும் ஏறவில்லை.

மேலும் அன்றைய  நிலையில் சுமார் 65 வீதமானவர்கள் சிங்கள மொழியையும், 29 வீதமானவர்கள் தமிழ் மொழியையும் ஏனையவர்கள் வேறு மொழிகளையும் பேசுபவர்களாகக் காணப்பட்டனர்.

அத்துடன் நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1955 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தீவு முழுவதும் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்தைக் கொண்டிருந்தன. இதனால் சிங்கள, தமிழ் மக்கள் தமது கருமங்களை ஆற்றிக் கொள்வதில் சமமான வசதிகளைக் கொண்டிருந்தனர்.

அத்துடன் மொழி தொடர்பான பிணக்குகளும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு இந்தக் கொள்கை அரசினால் புறமொதுக்கப்பட்டது. சிங்களம் மட்டும் சட்ட மூலம் தனிச் சிங்களப் பெரும்பான்மை பலத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டு 1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்தது.

இதனால் அரச வேலை வாய்ப்புக்களைப் பெறுவதில் தமிழர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். நீதிமன்றங்களிலும் தமிழிலில் கருமங்களை ஆற்றுவதில் இடர்கள் தோன்றின. அரசுத் தரப்பிலிருந்து என்னதான் சமாதானம் கூறப்பட்டாலும் தமிழ் மொழியின் இழந்த அந்தஸ்தை எந்த வகையிலும் சீர் செய்து கொள்ள முடியவில்லை.

மாறாக அந்த மொழி வீழ்ச்சிப் பாதையை நோக்கியே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் முதிர்ந்த அரசியல்வாதியும், இலங்கையின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவர் சிங்களம் மட்டும் சட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்; "ஒரு மொழி இரண்டு தேசங்கள்.

இரண்டு மொழிகள் ஒரு தேசம் என சுருக்கமாகக் கூறிச் சென்றார். உண்மையைக் கூறுவதாயின் சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே இனப்பிரச்சினை இந்த நாட்டில் ஆரம்பமாகியது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது அடையாளமாகத் தமது மொழியையே கருதுகின்றனர்.

தமிழர்கள் மதரீதியில் வேறுபட்டிருந்தாலும் மொழியைப் பொறுத்த வரை ஒரு போதுமே பிளவுபடமாட்டார்கள். தமது மொழியில் இன வெறியர்கள் கை வைத்த நிகழ்வானது. அவர்களது மனதில் ஆழமானதொரு காயத்தை ஏற்படுத்திவிட்டது.

பண்டார நாயக்க என்ற தனி மனிதன் தனது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு மொழியை மையமாகக் கொண்டு ஆடிய அரசியல் விளையாட்டு இந்த நாட்டை இரத்தச் சகதிக்குள் தள்ளிவிட்டது.

அவரது ஆட்சிக் காலத்தில் 1958 ஆம் ஆண்டு இடம் பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் இந்த நாட்டின் நீண்ட ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டது. தமிழ் சிங்கள மக்களின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இன்றைய அரசியல்வாதிகள் கூட இனவாத நெருப்பை ஊதிப் பெருப்பித்து வருவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

அரசியல் வெற்றிகளைப் பெறவேண்டுமாயின் பண்டாரநாயக்க வழியே சிறந்ததென அவர்கள் கருதுவதால் அதனையே பின்பற்றி வருகின்றனர். கடந்த கால கசப்பான நிகழ்வுகள் இவர்களது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தமிழர்களை ஓர் இரண்டாம் தரப் பிரஜைகள் போன்று கருதும் நிலையே தொடர்கின்றது.

1956 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இனவாத அரசியலே இந்த நாட்டின் தலைவிதியாக மாறிவிட்டது. பண்டாரநாயக்க ஏற்றிவைத்த இனவாத தீபத்துக்கு எண்ணெய் ஊற்றி அதனை மேன்மேலும் ஒளிரச் செய்வதில் இனவாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களது சிந்தனையில் மாற்றம் ஏற்படாதிருக்கும் வரையில் இந்த நாட்டின் தலைவிதியை எம்மைப் படைத்த ஆண்டவனால் கூட மாற்ற முடியாது.


Thanks : Uthayan 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக