Pages

சனி, 2 ஆகஸ்ட், 2014

இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்து



இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்து மற்றும் படங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரை வெளியானது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த கட்டுரை நீக்கப்பட்டது.
www.defence.lk. இலங்கை அரசின் பாதுகாப்புத் துறைக்கான அதிகாரப்பூர்வ இணையதளம். இதில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெறும் கடிதப் போக்குவரத்து குறித்த ஒரு கட்டுரை இன்று வெளியாகியது. விரும்பத்தகாத வகையில் புகைப்படமும், சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பும் அந்த கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

 

 

மீனவர் விவாகரத்தில் தமிழக அரசு மீதும், தமிழக மீனவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அந்த கட்டுரை தரம் குறைந்த வாசகங்களால் நிரப்பபட்டிருந்தது.

 

 

இது குறித்த செய்தி வெளியானதும் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உடனடியாக இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

 

மேலும், மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 

நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகளை தொடர்ந்து பிற்பகலில் அந்த இணையதளத்தில் இருந்த சர்ச்சைக்குரிய படம் மட்டும் நீக்கப்பட்டு, கட்டுரை தொடர்ந்து நீடித்தது. அடுத்த சில நிமிடங்களில் சர்ச்சைக்குரிய கட்டுரையும் நீக்கப்பட்டது. இதனிடையே, தரக்குறைவான விமர்சனம் செய்த இலங்கை அரசை, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டும், இலங்கை அதிபர் ராஜபக்ஷே உருவ பொம்மையை எரித்தும் போராட்டங்கள் நடைபெற்றன.

 
இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அவதுாறு கட்டுரையை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தை, அதிமுக எம்பி பாலகங்கா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இலங்கை துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ராஜபக்சேவின் உருவப்படத்தை எரித்து, துணைத்தூதரகத்திற்குள் செல்ல முயன்றால், அவர்களை போலீசார் கைது செய்தனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு, கோவை அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

 

இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காந்தி சிலை முன் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ராஜபக்சேவின் உருவப்பொம்பையை எரித்து தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர். இதேபோல் பொள்ளாச்சியில் ராஜபக்சே, சுப்பிரமணியன் சுவாமி உருவப்படங்களை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக