Pages

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Sudar Oli ePaper 29AUG2014 சுடர் ஒளி

சுடர் ஒளி


“ஜனாதிபதி மஹிந்தராஜபக்­ச தலைமையிலான அரசு தமிழருக்குத் தீர்வு வழங்காமல் காலத்தை இழுத் தடித்து அவர்களை அடக்கி – ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நடத்துகின்றபடியால்தான் தீர்வு விடயம் தொடர்பில் சர்வதேசத்தை நாடினோம்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


“”சர்வதேசத்தின் உதவியுடன் தமிழருக்கான தீர்வை எந்த வழியில் – எப்படிப் பெறலாம் என்று எமக்குத் தெரியும். இது தொடர்பில் அமைச்சர்கள் எமக்குப் பாடம் புகட்டத் தேவையில்லை” என்றும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
“2011 – 2012இல் நடைபெற்ற இரு தரப்புப் பேச்சை அரசுதான் குழப்பியடித்தது. இறுதியில் 3 தடவைகள் பேச்சு மேசைக்கு வராமல் எம்மை ஏமாற்ற அரசு முயன்றது. எனவே, இனிமேல் இருதரப்புப் பேச்சு நடைபெறுவதாக இருந்தால் அரசுதான் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும். அவ்வாறு அரசு அறிவித்தால் அதனை நாம் பரிசீலனை செய்து இறுதி முடிவை அறிவிப்போம்” என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான இருதரப்புப் பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு முறையாக கோரிக்கை விடுத்தால், அது பற்றி பரிசீலிப்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வே தரவேண்டும் என்றும், வெளிநாடுகளிடம் முறையிடுவதால் தீர்வு எதுவும் கிடைக்கப்போவ தில்லை என்றும்

நேற்றுமுன் தினம் பூநகரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்ச­ கூறியிருந்தார்.


இவ்விரு அமைச்சர்களினதும் கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் நேற்று “சுடர் ஒளி’ வினவியது. இதன்போதே மேற்படி விடயங்களை அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
மாவை சேனாதிராஜா எம்.பி.

“2009இல் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று சர்வதேசத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ வாக்குறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் இதுவரை நிறைவேற்றவில்லை.

2011ஆம், 2012ஆம் ஆண்டுகளில் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. இதன்போது தீர்வுத் திட்டம் ஒன்றை எழுத்துமூலமாக அரசிடம் சமர்ப்பித்திருந்தோம். ஆனால், அதற்குப் பதிலை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துப் பேச்சைக் குழப்பியடித்தது அரசு.
இந்தத் தெரிவுக்குழுவில் பங்கேற்றி நாம் ஏமாறத் தயாரில்லை என்று இருதரப்புப் பேச்சுக் குழம்பிய கையோடு ஜனாதிபதியிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழருக்குத் தீர்வு வழங்காமலும், அவர்களை அடக்கி d ஒடுக்கி மஹிந்த அரசின் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்தபடியாலும் தீர்வு விடயம் தொடர்பில் வெளிநாடுகளை நாம் நாடினோம்.
எனவே, வெளிநாடுகளின் உதவியுடன் தமிழருக்கான தீர்வை எந்த வழியில் d எப்படிப் பெறலாம் என்று எமக்குத் தெரியும். அந்த வல்லமை தமிழருக்கு இருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஸில் உட்பட அமைச்சர்கள் எமக்குப் பாடம் புகட்டத் தேவையில்லை.

அதேவேளை, மீண்டும் இருதரப்புப் பேச்சுக்கு அரசு விரும்பினால் உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவிக்கவேண்டும். அவ்வாறு அரசு அறிவித்தால் கூட்டமைப்பின் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் இது குறித்து நாம் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்போம்.

எனினும், இலங்கை d இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது அரசமைப்பு திருத்தத்தையே முழுமையாக அமுலாக்கப் பின்னடித்து அதில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பிடுங்கி வைத்திருக்கும் அரசு தமிழருக்கு எப்படித் தீர்வை வழங்கப்போகின்றது என்பது சந்தேகமே” d என்று தெரிவித்தார் மாவை சேனாதிராஜா எம்.பி.



சுமந்திரன் எம்.பி.

“2011இல் அரசின் அழைப்புக்கிணங்கவே நாம் பேச்சுமேசைக்குச் சென்றோம். 2011 ஆம் ஜனவரி தொடக்கம் 2012 ஜனவரி வரை இரு தரப்புப் பேச்சுகள் தொடர்ந்தன. ஆனால், 2012 ஜனவரி இறுதியில் 3 தடவைகள் பேச்சு மேசைக்கு அரசு வரவில்லை. பேச்சு நடைபெறவிருந்த இடத்திற்கு நாம் சென்று திரும்பி வந்தோம்.
ஆனால், குறித்த இடத்திற்கு வராமல் பேச்சைக் குழப்பியடித்தது அரசு.
எம்மை அன்று ஏமாற்ற முயன்ற அரசு, தற்போது இருதரப்புப் பேச்சுக்கு எம்மிடம் இருந்து முறையான கோரிக்கையை எதிர்பார்ப்பதன் அர்த்தம் குறித்து எமக்குப் புரியவில்லை.

இருதரப்புப் பேச்சுக்கு முதலில் அழைத்ததும் அரசு; இறுதியில் குழப்பியடித்ததும் அரசு. எனவே, இனிமேல் இரு தரப்புப் பேச்சு நடைபெறுவதாக இருந்தால் அரசுதான் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும். அவ்வாறு அரசு அறிவித்தால் அதனை நாம் பரிசீலனை செய்து இறுதி முடிவை அறிவிப்போம். இதுதான் எமது நிலைப்பாடு” – என்றார் சுமந்திரன் எம்.பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக