Pages

வியாழன், 18 செப்டம்பர், 2014

இசுக்கொட்லாந்து SCOTLAND 2014 ஸ்காட்லாந்து



பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707-ல் பிரிட்டன் நாடு அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது. அதேபோன்று, ஸ்காட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.


இதையடுத்து பொது வாக்கெடுப்பு தொடர்பாக ஆதராகவும், எதிராகவும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்திய நேரப்படி, இன்று காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு தொடங்க உள்ளது. இரவு 10 மணி வரை நடைபெறும் வாக்கெடுப்பில் சுமார் 42 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவு நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தனி நாடாகப் பிரிந்து செல்வது குறித்து ஸ்காட்லாந்து மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். தனியாகப் பிரிந்து சென்றால், புதிதாக உருவாகும் இரு நாடுகளும் எத்தகைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும், இரு நாடுகளுக்கும் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?

வளம் நிறைந்த ஸ்காட்லாந்து



ஸ்காட்லாந்து எதிர்நோக்கும் சவால்கள் சுமார் 50 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஸ்காட்லாந்து சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேட் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக உருவாகும் வரை அந்த நாடு தனி நாடாகவே இருந்து வந்தது.

பழங்காலம் தொட்டே பல பெருமைகளைக் கொண்ட நாடு இது. அமெரிக்காவின் விடுதலைக்கே தூண்டுகோலாக இருந்த நாடு ஸ்காட்லாந்துதான் என்று வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன. பென்சிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃபிளெமிங், தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் லோகி பெயர்டு, தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் போன்றோர் ஸ்காட்லாந்துக்காரர்கள்தான்.

கிரேக்கர்கள் மனித குலத்துக்கு வழங்கிய கொடைக்குப் பிறகு ஸ்காட்லாந்து காரர்களின் கொடையே மிகப் பெரியது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த வின்ஸ்டன் சர்ச்சிலே கூறியிருக்கிறார்.


ஸ்காட்லாந்து விடுதலைக்கு முன்வைக்கப்படும் காரணங்களுள் மிக முக்கியமானது வளங்கள் சுரண்டப்படுவதுதான். இதனால் இங்கிலாந்துடன் இணைந்த காலத்தில் இருந்தே ஸ்காட்லாந்தில் தொடர்ந்து விடுதலைக் குரல்கள் ஒலித்து வருகின்றன. இப்போதைய நிலைப்படி ஸ்காட்லாந்துக்கென தனி அரசியல் சட்டம் உள்ளது. நாடாளுமன்றமும் உள்ளது.


ஆனால் இந்த நாடாளுமன்றத்துக்கு குறைந்த அளவு அதிகாரமே வழங்கப்பட்டிருக்கிறது. நிதி, வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு இந்த மாதிரியான முக்கியமான அம்சங்கள் அனைத்தும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமே உள்ளது. அரசின் பெரும்பாலான சேவைகளை லண்டனில் இருந்தே ஸ்காட்லாந்து பெற்றாக வேண்டும்.


பொருளாதார ரீதியில் ஸ்காட்லாந்து வலுவாக இருப்பதும் அந்நாட்டின் விடுதலைக் கோரிக்கைக்கு மிக முக்கியமான மற்றொரு காரணம். ஐரோப்பிய ஒன்றியத்தின் 75 சதவீத எண்ணெய் பிரிட்டனில்தான் உற்பத்தியாகிறது. அதில் 90 சதவீதம் ஸ்காட்லாந்தின் எல்லைக்குள்பட்ட கடல் பகுதியிலேயே பெறப்படுகிறது.


இது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மரபுசாரா எரிசக்தியில் 25 சதவீதத்தை ஸ்காட்லாந்து மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஓராண்டுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி மூலம் பிரிட்டிஷ் கருவூலத்துக்கு வருவாய் ஈட்டுகிறது ஸ்காட்லாந்து.


ஆனால், புதிய நாட்டுக்குப் பல சவால்களும் இருக்கின்றன. பிரிட்டனின் நாணயமான பவுண்டை பயன்படுத்த முடியாது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு புதிதாக விண்ணப்பித்தாக வேண்டும். இதேபோன்ற பிரச்னைகள் பிரிட்டனுக்கும் உண்டு. சர்வதேச விவகாரங்களில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது.


இரண்டாவது மிக முக்கியமான பிரச்னை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக நீடிக்கப்போவது யார் என்பதும் கேள்விக்குறியாகும். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்கள் ஸ்காட்லாந்துக்காரர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக