Pages

வெள்ளி, 31 அக்டோபர், 2014

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை





 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை

கொழும்பு, அக்.31-

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது
.



5 தமிழக மீனவர்கள் கைது

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22) ஆகிய 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஹெராயின் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கூறி 5 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன், இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு

பின்னர் அவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை கொழும்பு ஐகோர்ட்டில் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா முன்னிலையில் நடைபெற்று வந்தது.

கைதான தமிழக மீனவர்கள் சார்பில் வக்கீல்கள் அனில் சில்வா, ஷராபி மொகிதீன், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். விசாரணையின் போது, இந்திய அரசு தரப்பில், தமிழக மீனவர்கள் 5 பேரும் அப்பாவிகள் என்றும், குற்றவாளிகள் அல்ல என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

தூக்கு தண்டனை

3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோரும் மற்றும் அவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா தீர்ப்பு கூறினார்.


தூக்கு தண்டனையை எதிர்த்து நவம்பர் 14-ந் தேதிக்குள் அவர்கள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.


மீனவர்கள் கொந்தளிப்பு

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே, இந்திய அரசுக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

இந்திய அரசு மேல்முறையீடு

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

‘‘5 இந்திய மீனவர்களுக்கு கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து, கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வக்கீல்கள் மூலம் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்’’ என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதீன் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதேசமயம், ‘‘நமது மீனவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நாம் கருதுவதால் இந்த பிரச்சினையை இலங்கை அரசிடமும் இந்தியா கொண்டு செல்லும்’’ என்று அவர் கூறினார். அத்துடன் இந்த பிரச்சினையை சட்டரீதியாகவும், தூதரக உறவுகள் மூலமாகவும் இந்திய அரசு கையாளும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஐகோர்ட்டு நவம்பர் 14-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருப்பதால் அதற்குள், இந்தியாவின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

இலங்கை தூதருடன் பேச்சு

இதற்கிடையே, வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேற்று தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து பேசினார். மேலும் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரும் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக