Pages

வியாழன், 18 டிசம்பர், 2014

ஜாமீன் 4 மாதங்கள் நீடிப்பு



புதுடெல்லி, டிச.19-

பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ,100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

கர்நாடக ஐகோர்ட்டில் மனு

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்

கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததை தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அங்கு ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் 17-ந் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு கர்நாடக தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அத்துடன் விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

விசாரணை

இந்த நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தபடி ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி ஆஜரானார். அவர் வாதாடுகையில், ‘‘இந்த வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எனது கட்சிக்காரர் சார்பில் 173 தொகுப்புகள் (சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் பக்கங்கள்) கொண்ட ஆவணங்கள் ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்கள் தரப்பு வாதங்களை வைக்க 30 அலுவலக நாட்கள் தேவைப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் உத்தரவு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

சுப்பிரமணியசாமி

இதற்கிடையே எதிர்மனுதாரர்களில் ஒருவரான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, கர்நாடக ஐகோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து தான் வாதாடப் போவதால் ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் இரு பிரதிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், ஏற்கனவே ஜெயலலிதாவின் கைது மற்றும் ஜாமீன் தொடர்பாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போனதாகவும் அப்போது அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சுப்பிரமணியசாமிக்கு அவர் கோரியுள்ள படி மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களின் பிரதி ஒன்றை வழங்குமாறு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தாராளமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் சுப்பிரமணியசாமியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

ஜாமீன் 4 மாதங்கள் நீடிப்பு

பின்னர், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 17-ந் தேதி அன்று வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு அதாவது 18.4.2015-ந் தேதி வரை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தனி அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த அமர்வு மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை தினசரி விசாரித்து 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஜெயலலிதா தரப்பு தங்கள் வாதங்களை 2 மாதங்களுக் குள் முடிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். ஏதேனும் காரணங்களால் ஒரு மாதத்துக்குள் உத்தரவு வழங்க முடியவில்லை என்றால், மேலும் 15 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக