Pages

செவ்வாய், 2 டிசம்பர், 2014

சிங்கள ஜனாதிபதித் தேர்தலும் ஈழ தமிழ் மக்களும்


 சிங்கள ஜனாதிபதித்  
தேர்தலும் ஈழ தமிழ் மக்களும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் வெளியிடப்பட்ட பின் மஹி்ந்த அரசுக்கு இருந்த ஆதரவுத்தளம் ஆட்டம்கண்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சுகாதார அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முன்வந்து எதிரணியுடன் இணைந்தபோதே அரசில் அங்கம் வகித்த மூத்த அமைச்சர்கள் சிலரும் அரசை விட்டு நீங்கி எதிரணியில் சாய்ந்துவிட்டனர்.


சுதந்திரகட்சியின் அடிமட்ட உறுப்பினரான மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் சந்திரிகா என்னும் பாரிய விருட்சம் நிழல் கொடுத்து நிற்கிறது. இரண்டு பிரதமர்களின் மகள் மட்டுமல்ல, 18 வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பண்டாரநாயக்க குடும்பத்தின் 3ஆவது பிரதமராகவும் பின் 11 ஆண்டுகள் ஜனாதிபதிப் பதவியை வகித்த சந்திரிகாவுக்கு சிங்கள மக்கள் மனதில் நீங்காத இடம் ஒன்றுள்ளது மட்டுமல்ல, அமரர் பண்டாரநாயக்காவின் செல்வாக்கு இன்றும் இவருக்குத் துணையாகவே நிற்கிறது. இக்காரணத்தால் சுதந்திரக் கட்சியின் இன்னும் பல அடிமட்ட உறுப்பினர்களும் தொண்டர்களும் சந்திரிகாவின் பின்னால் அணி திரளவே செய்வார்கள்.

எனவே, இன்னும் பல மக்கள் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசைவிட்டு விலகி எதிரணியில் இணையப் போவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இக்காரணத்தால் ஜனாதிபதி ராஜபக்­வுக்கான சிங்கள மக்களின் ஆதரவு கணிசமாகக் குறையக்கூடிய வாய்ப்புகளே அதிகம். இதனால்தான், இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கிடையிலான அதிகாரப்போட்டி, ஏறக்குறைய சமபலமடைந்து சிறுபான்மை மக்களின் வாக்குகளே இரண்டு போட்டித் தரப்புகளுக்குமிடை யிலான வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாகப் பரிணாமம் பெறும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக எதிர்வுகள் கூறப்படுகின்றன.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சிறுபான்மையினரின் தயவின்றி, 75% வாக்குப்பலத்தைக்கொண்ட சிங்கள மக்கள் தமது சொந்த வாக்குகளாலேயே தாம் விரும்பிய ஆட்சியைத் தாமாகவே தெரிவு செய்ய முடியும் என்ற துணிவைச் சிங்களப் பேரினவாதத்துக்கு வழங்கியிருந்தது. இந்த மேலதிக நிலை ஆபத்துக்குள்ளாகி விடலாம் என்ற அச்சம் சிங்கள மக்களுக்குத் தோன்றுமாயின் சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்கள் எந்தப் பக்கம் சாய்கிறார்களோ அப்பக்கத்துக்கு முழுமையான எதிர்ப்பக்கத்தில் சாய்ந்துவிடக்கூடிய ஆபத்து உருவாகும். இது சிறுபான்மை யினரின் பேரம் பேசும் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை தமிழ், முஸ்லிம் தரப்புகள் நன்றாக மனதிலிருத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ், முஸ்லிம் தரப்புகள் தம் துணையின்றி எந்த அரசும் ஆட்சியமைத்து விட முடியாது என்று தம்பட்டம் அடிப்பதைத் தவிர்த்துக்கொண்டு, யதார்த்தத்தை நோக்கி ‡ தம் குறிக்கோளை முன் நிறுத்தி ஆரவாரமின்றி ஆழ்ந்த அமைதி யுடன் செயற்பட வேண்டும். ஏனெனில், 2010 தேர்தலில் தமிழ், முஸ்லிம் தரப்புகளும், ஏனைய சிறு சிறு அரசியற் கட்சிகளும் பெரிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோத்து ஓரணியில் நின்று சரத் பொன்சேகாவை ஆதரித்தும் மிகப்பாரிய தோல்வி யைக் கண்டன. ஏனெனில், இந்த நாட்டில் பேரினவாதம் என்ற ஆக்கிரமிப்புச் சிந்தனையானது, சாதாரண நாட்டுக் குடிமக்களின் நலன்கள், தேவைகள், ஜனநாயக விழுமியங்கள், நீதியுடன்கூடிய நல்லாட்சி அனைத்தையும் ஒதுக்கிவிட்டுள்ளது. பேரினவாத தீவிர மேலாதிக்கமே மக்களை ஆக்கிரமித்து அடிமையாக்கியி ருந்தது. அதன் பின்விளைவாகவே தமிழினத்தின் மேல் பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த வெற்றி மாயை சிங்கள மக்களை ஆட்கொண்டிருந்தது.

ஆயினும், எதேச்சதிகார குடும்ப ஆட்சி முறை, சட்ட ஆட்சிச் சீர்குலைவு, நீதித்துறையின் முடக்கம், அதிகாரத் துஷ்பிரயோகம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவை மக்களின் அன்றாட வாழ்க்கையை அவலத்துக்குள்ளாக்கி விட்ட இன்றைய நிலையில், யுத்த வெற்றி மாயை சிங்கள மக்களை விட்டு கொஞ்சம் அகலத் தொடங்கியுள்ளது எனலாம். அதன் பிரதிபலிப்பே ஊவா மாகாணத் தேர்தலில் அரசின் பின்னடைவு, அரசில் முக்கிய பதவிகளை வகித்தவர்க ளின் வெளியேற்றம் போன்றவை மஹிந்த அரசை ஆட்டம் காணச்செய்து அச்சத்துக்குள்ளாக்கு வனவாகும்.
இப்பின்னடைவிலிருந்தும் அச்ச நிலையிலிருந்தும் மேலெழ, மஹிந்த அரசு கையாள முனைகின்ற தந்திரோபாயம், மீண்டும் புலிப்பூச்சாண்டியும், சர்வதேசத்தின் தனி ஈழம் அமைக்கும் சிங்களவர்களுக் கெதிரான சதிச் செயலுமே என்றே பிரசாரம் செய்ய முன்னெடுக்கப்படு கின்றது. இச்சதியிலிருந்து பெளத்த ‡ சிங்கள தேசத்தை மீட்க வேண்டுமாயின், புலிகள் மீளெழுவதைத் தடுக்கவேண்டும்; வடக்கு, கிழக்கில் இராணுவம் நிரந்தரமாக நிலைபெற வேண்டும்; தமிழர் தாயகம் என்ற சிந்தனை அடியோடு அழிக்கப்பட வேண்டும்; முழு நாடும் சிங்கள ‡ பெளத்த நாடாக வேண்டும்; இதற்காக ஐ.நா. சபையில் யுத்தக்குற்றம் சாட்டப்பட்டுள்ள மஹிந்த அரசு

அக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட மக்களின் பலம் தன்பின்னே திரள வேண்டும் என்பதே அரசுத் தரப் பின் முழுமூச்சான பிரசாரமாக இந்தத் தேர்தலில் இருக்கப்போகின்றது.


தமிழ், முஸ்லிம் மக்கள், அரசின் இந்தப் பிரசாரத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் எதிர ணியின் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்போகிறார்களா என்பது தான் எம்மத்தியில் உள்ள பிரதான கேள்வியாகும். ஏனெனில். சிறுபான்மையினங்கள் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக முடிவெடுக்கப் போகிறார்கள் என்று ஒரு சாடை மாடையான தகவல் கசிந்தாலே போதும், எதிரணி இவர்களுடன் நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டது என்ற பிரசாரம் உச்சம் பெறும்.
மாறாக, தற்போதைய அரசுத் தலைவரான மஹிந்த­வுக்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமானால், எதிரணியின் பிரசாரம் வேறு விதமாக அமை யும். தமிழ், முஸ்லிம் தரப்புகளை ராஜபக்­ விலைகொடுத்து வாங்கி விட்டதாகவும், மேலும் ஒரு 6 வருட பதவிக் காலத்துக்கு ஆசைப்பட்டு சிங்களவர்களையும் நாட்டையும் மஹிந்த காட்டிக்கொடுத்துவிட்டார் என்றும், தம்பக்கமுள்ள சரத் பொன்சேகாவும் படைத்தரப்பினர் கள் தமது உயிரைப் பணயம் வைத்துப் பெற்ற வெற்றியை ‡ செய்த தியாகத்தை தனது அதிகாரத்தைத் தக்க வைப்பதற் காக பணயம் வைத்துவிட்டார். அதற்கான இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதெனவும் ரணில் விக்கிரமசிங்க d சந்திரிகா தரப்பு பிரசாரம் செய்யும்.

தமிழர்களுக்கு எதுவித தீர்வும் கிடைக்கக்கூடாதென்பதில் இந்த இருவரும் ராஜபக்­வுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட கசப்பான உண்மையாகும். புலிகளை வெல்ல வேறு வழியில்லை என்பதற்காக அவர்களின் போராட்டத்திலிருந்து தமிழர்களைத் திசை திருப்ப 2000ஆம் ஆண்டில் சந்திரிகா ஜனாதிபதியாக ஆட்சியிலிருந்த போது கவர்ச்சிகரமான பிராந்தி யங்களின் ஒன்றியம் என்ற ஒரு தீர்வுப்பொதியைப் புதிய அரசியல் யாப்பாக நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். ரணில் விக்கிர மசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுமே நாடாளுமன்றத்தில் அந்த யாப்பின் பிரதியை எரித் தும், பெளத்த துறவிகளைத் தூண்டியும் அந்த யாப்பை நிறைவேற்ற முடியாமல் செய்தன.

இதே ஐக்கிய தேசியக் கட்சி தான் முன்னர் பண்டா ௦- செல்வா ஒப்பந்தத்தையும் கண்டிக்கு யாத்திரை செய்து கிழித்தெறிய வைத்தது. அதேபோல, ரணில் விக்கிரமசிங்கவும் புலிகளை வேறு வகையில் திசை திருப்ப முடியாது என்பதால் 2002இல் சமாதான போர் நிறுத்த உடன் படிக்கையை புலிகளுடன் செய்து சர்வதேச மட்டப் பேச்சு என்று 3 வருடமாக இழுத்தடித்தார்.

அதேவேளை பாதுகாப்பு உடன்படிக்கை என்ற பெயரில் புலிகளைப் பலமிழக்கச் செய்யும் செயல்களில் ஈடுபட்டிருந்ததைக் கவனத்தில் எடுக்கவேண்டும். அத்துடன், கருணாவை புலிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் நரி வேலையையும் செய்தார் என்று அவரே வெளிப்படுத்திய விவரத்தையும் கருத்தில் எடுக்கவேண்டும். எனினும், புலிகளும் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்தபோது அரசின் 3 முக்கிய அமைச்சர்களைப் பறித்தெடுத்து சமாதானத்தை சந்திரிகா குழப்பினார். ஆக இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளுமே தமிழர்களுக்கான தீர்வு வழங்குவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு.

இக்கட்சிகள் இரண்டும் கடந்த காலங்களில் எப்படிச் செயற்பட்டாலும் தமிழ் மக்கள் தமது மோசமான எதிரி ஒருவரை, இனம் கண்டு தோற்கடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். 


நன்றி  - சுடர் ஒளி    

http://sudaroli.com/?p=5331



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக