Pages

வியாழன், 4 டிசம்பர், 2014

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் காலமானார்.


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் இன்று காலமானார்.

அண்மையில் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், உடல் நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணய்யர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தில் 1914 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு , 1957 ஆம் ஆண்டு கேரளாவின் தலைச்சேரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கிருஷ்ணய்யர், கம்யூனிஸ்ட் அரசில், சட்டம், சிறை, நிர்வாகம், மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 1968ஆம் ஆண்டு, உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

1971ஆம் ஆண்டு மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1973ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கில், இந்திரா காந்தி பிரதமராக தொடரலாம் என்றும், ஆனால் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க இயலாது என தீர்ப்பளித்தார். இதன் காரணமாகத் தான், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவிக்க நேரிட்டது. இவருக்கு 1999ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 100 ஆண்டுகள் வாழ்ந்து இயற்கையோடு கலந்து விட்ட கிருஷ்ணய்யரின் புகழ், நீலவானத்தைப் போன்று நிரந்தரமாக இருக்கும் என கூறியுள்ளார். கிருஷ்ணய்யர் தந்த தீர்ப்புகள் வரப்போகின்ற தலைமுறைகளுக்கு வழிகாட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள பொதுநல வழக்காடு முறையை 35 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கி, அதை ஊக்குவித்த பெருமை கிருஷ்ணய்யருக்கு உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நேர்மையையும், லட்சிய உறுதியும் கொண்ட கிருஷ்ணய்யர், இந்திய நீதித்துறையில் பெரும் மாற்றங்களை செய்து காட்டியவர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக