Pages

வியாழன், 4 டிசம்பர், 2014

SCourt rejects Kerala plea to review Mullaperiyar verdict கேரள அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி !

புதுடெல்லி, டிச.4-

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 7-ந் தேதி தீர்ப்பு கூறியது. அத்துடன் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியை கண்காணிக்க 3 உறுப்பினர்கள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைக்க உத்தரவிட்டது.

மேலும், நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிரான கேரள அரசின், நீர்ப்பாசனம் மற்றும் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

142 அடியாக உயர்வு

இதைத்தொடர்ந்து, 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் அணையில் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது.

சமீபத்தில் பெய்த பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 142 அடியை எட்டியது. இந்த நிலையில், நிபுணர்கள் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை பலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

கேரள அரசு மனு

இதற்கிடையே, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூன் 30-ந் தேதி கேரள அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது அணையின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், அணையின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த முடிவை ஏற்க முடியாது என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்களின் பாதுகாப்பை கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் விசாரணை

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், எம்.ஒய்.இக்பால், சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதியின் அறையில் விசாரணை நடந்தது. மூடிய அறைக்குள் விசாரணை நடைபெற்றதால் இருதரப்பு வழக்கறிஞர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கேரள அரசின் மறுஆய்வு மனு மீது நீதிபதிகள் எடுத்த முடிவு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அது பற்றிய விவரம் வெளியானது.

மனு தள்ளுபடி

கேரள அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு கடந்த மே 7-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் தாங்கள் குறுக்கிட விரும்பவில்லை என்றும், கேரள அரசின் மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ததாகவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக