Pages

புதன், 19 ஆகஸ்ட், 2015

இலங்கை : ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

 இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது

ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதால், ரனில் மீண்டும் பிரதமர் ஆனார். இதன் மூலம் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது.

கொழும்பு, ஆக.19-

இலங்கை பாராளுமன்றத்தில் 225 இடங்கள் உண்டு. இவற்றில் 196 இடங்கள் தேர்தல் மூலமும், மீதி 29 இடங்கள் தேர்தலில் கட்சிகள் பெறுகிற ஓட்டுகளின் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன.

விறுவிறுப்பான தேர்தல்

இதன்படி அங்கு நேற்று முன்தினம் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 196 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவு செய்த 21 அரசியல் கட்சிகள் களம் இறங்கின. அவற்றின் சார்பில் மொத்தம் 6 ஆயிரத்து 151 வேட்பாளர்களும், சுயேச்சையாக 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. உடனடியாக ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ரனில் அணி வெற்றி

இந்த தேர்தலில் 113 இடங்களை பெறுகிற கட்சிதான் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், எந்தவொரு கட்சியும் அந்த தகுதியை பெற வில்லை.

எனினும் தனிப்பெரும் அணியாக ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி தேர்தல் நடந்த 196 இடங்களில் 93 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர் ராஜபக்சே, தற்போதைய அதிபர் சிறிசேனா ஆகியோரின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி 83 இடங்களை கைப்பற்றியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கிற வட பகுதியில் 3 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி பெற்றது. இந்த அமைப்பு 14 இடங்களை கைப்பற்றி உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை பாராளுமன்ற தேர்தலில், தமிழ் மக்களின் குரலை இவர்கள் ஓங்கி ஒலிக்க வழி பிறந்துள்ளது.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் - 225

தேர்தல் நடந்தவை - 196

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி - 93

ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி - 83

தமிழ் தேசிய கூட்டமைப்பு- 14

ஜனதா விமுக்த பெரமுனா - 4

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1

விகிதாச்சாரம்

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு 11 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 9 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

இந்த இடங்களுடனும் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு மொத்தம் 104 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 92 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 இடங்களும் கிடைக்கும்.

கட்சி தாவல்?

தனிப்பெரும்பான்மை பலம் பெற ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு இன்னும் 9 இடங்களே தேவை.

அதே நேரத்தில் ராஜபக்சே தலைமையிலான எதிர் அணியில் இருந்து 25 முதல் 40 எம்.பி.க்கள் வரை ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு தாவக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையில் கட்சிதாவல் தடைச்சட்டம் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரனில் விக்ரம சிங்கே கருத்து

தேர்தல் வெற்றி குறித்து ரனில் விக்ரம சிங்கே கருத்து தெரிவிக்கையில், “நல்லாட்சிக்கு மக்கள் தந்த தீர்ப்பு இது. மக்களுக்காக இந்த வெற்றியை உறுதி செய்வதற்கு ஓய்வின்றி உழைத்த அனைத்து கட்சிகள், தனிபட்ட நபர்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, “புதிய சகாப்தத்தின் சவால்களை எதிர்கொண்டு, நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். சவால்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் அனைவரும் எங்களுடன் கரம் கோர்க்க அழைப்பு விடுக்கிறேன்” என கூறினார்.

ராஜபக்சே கனவு தகர்ந்தது

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என கனவு கண்டார். ஆனால் அந்த கனவு தகர்ந்து தவிடுபொடியாய் ஆகிவிட்டது.

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜபக்சே, “பிரதமராகும் எனது கனவு கலைந்து விட்டது” என ஒப்புக்கொண்டார். மேலும், “நான் ஒப்புக்கொள்கிறேன். கடும் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்” என கூறினார்.

பதவி ஏற்பு

மீண்டும் பிரதமர் ஆகியுள்ள ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரான ரனில் விக்ரம சிங்கே, உடனடியாக நாட்டின் 15-வது பிரதமராக பதவி ஏற்பார், அவருக்கு அதிபர் மாளிகையில் நடக்கிற எளிய விழாவில் அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

மந்திரிகள் பின்னர் ஓரிரு நாளில் பதவி ஏற்பார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிசேனா தேசிய அரசுதான் அமைப்பார் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் சேரப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் அமர்வோம் என ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி உறுப்பினர் உதய கம்மான் பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் ரனில் விக்ரம சிங்கேயின் மந்திரிசபையில் இடம் பெறுவார்கள் என மற்றொரு தகவல் கூறுகிறது.

புதிய பாராளுமன்றம்

புதிய பாராளுமன்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி கூடும் என கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 

============== தினத்தந்தி =========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக