Pages

புதன், 19 பிப்ரவரி, 2014

பேரறிவாளன்-முருகன்-சாந்தன் விடுதலை: தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி ! Vaiko Thanks TN Chief Minister Jayalalitha

புதுடெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-





ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28இல், பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில், முருகன், சாந்தன் பேரறிவாளர் ஆகிய ஆகிய மூவர் உட்பட, 26 பேர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தால் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்; மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது; நால்வருக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டது. பின்னர் நளினியின் கருணை மனு மீது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடைசியாக, மேற்கண்ட மூவருக்கும் தூக்கு உறுதி செய்யப்பட்டது. 

இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இவர்கள் விடுத்த கருணை மனுக்கள் மீது, 11 ஆண்டுகள் 4 மாதங்கள் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 2014 ஜனவரி 21 ஆம் தேதி, 15 பேர்களது மரண தண்டனையை இரத்துச் செய்த அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், இன்றைக்கு இந்த மூவருடைய தூக்குத் தண்டனையையும் உச்சநீதிமன்றம் இரத்துச் செய்து இருக்கின்றது. மேலும் மாநில அரசு அவர்களைச் சிறையில் இருந்து விடுவிப்பதற்கான சாத்தியங்களை உள்ளடக்கியதாக இந்தத் தீர்ப்பினை வழங்கி இருக்கின்றார்கள்.  

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் சுட்டிக் காட்டி இருப்பதைப் போல, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 432, 433 ஏ பிரிவுகளின்படி, இவர்கள் மூவரையும் வேலூர்ச் சிறையில் இருந்து உடனே விடுதலை செய்ய வேண்டும் என நேற்று உச்சநீதிமன்றத்தின் முன்பு இருந்து, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தேன். 


இன்று தமிழ்நாடு அமைச்சரவையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு எடுத்து இருக்கின்றது. இது மெச்சத்தகுந்த, மனிதாபிமான நடவடிக்கை ஆகும். தமிழக முதல்வரின் கருணையும், மனிதாபிமானமும் மிக்க இந்த நடவடிக்கைக்கு, கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக