Pages

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

உற்சாக வெள்ளம் கரைபுரண்டது கொட்டும் மழையில் பூமாரி பொழிந்து ஜெயலலிதாவை வரவேற்ற தொண்டர்கள்

 பெங்களூர் சிறையில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு நேற்று விடுதலையான ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் இல்லம் வரை கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

http://epaper.dailythanthi.com/


சென்னை, அக்.19-

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக் கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27-ந் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன்
ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததால் கடந்த 9-ந் தேதி அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை யும் நிறுத்திவைத்த நீதிபதிகள், கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறும் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது என்றும், வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் டிசம்பர் 18-ந் தேதிக் குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதேபோல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினார்கள்.

விடுதலையானார் ஜெயலலிதா

ஜாமீன் நடைமுறைகள் நிறைவடையாததால் ஜெயலலிதா நேற்று முன்தினம் விடுதலை ஆகவில்லை.

ஜாமீன் நடைமுறைகள் முடிவடைந்து 22 நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

நேற்று காலை 11 மணிக்கு தனிக்கோர்ட்டு கூடியதும், நீதிபதி மைக்கேல் டி.குன்கா இருக்கையில் வந்து அமர்ந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பில் குமார், அசோகன், மணிசங்கர், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியும், தண்டனையை நிறுத்திவைத்தும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்தனர். அதை நீதிபதி மைக்கேல் டி.குன்கா படித்து பார்த்தார்.

நீதிபதி குன்கா உத்தரவு

பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஜெயலலிதாவுக்கு பரத், குணஜோதி ஆகியோர் தலா ரூ.1 கோடிக்கான சொத்து பத்திரங்களை உத்தரவாதமாக தாக்கல் செய்தனர். இதேபோல் மற்ற 3 பேருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அவற்றை பரிசீலித்த நீதிபதி மைக்கேல் டி.குன்கா, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

“தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்திவைத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஒரு குற்றவாளிக்கு2 பேர் வீதம் 8 தனி நபர்கள் தலா ரூ.1 கோடி வீதம் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை உத்தரவாதமாக வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கூறி உள்ளது. உத்தரவாதத்துக் கான சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுகிறேன். மேலும் இந்த கோர்ட்டு விதிமுறைப்படி கோர்ட்டு ஊழியர் ஒருவர் உத்தரவை எடுத்துச்சென்று, சிறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக வழங்கும்படி உத்தரவிடுகிறேன்.”

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சிறையில் இருந்து வெளியே வந்தார்

இந்த நடைமுறைகள் அனைத்தும் மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவு ‘டைப்’ செய்யப்பட்டு, அதில் பிற்பகல் 2 மணிக்கு சிட்டி சிவில் கோர்ட்டு பதிவாளர் சந்திரசேகர மருகூர், நீதிபதி மைக்கேல் டி.குன்கா ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிவைத்தனர். அந்த உத்தரவை கோர்ட்டு ஊழியர் வெங்கடேஷ் போலீஸ் வாகனத்தில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு எடுத்துச் சென்றார். அவருடன் அ.தி.மு.க. வக்கீல் ஒருவரும் சென்றார்.

நீதிபதியின் உத்தரவை பிற்பகல் 2.45 மணிக்கு சிறை கண்காணிப்பு அதிகாரியிடம் கோர்ட்டு ஊழியர் வெங்கடேஷ் வழங்கினார். அதன்பிறகு ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்குவது உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்தது.

இதைத்தொடர்ந்து, பிற்பகல் 3.15 மணிக்கு ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்தார். 3.20 மணிக்கு அவர் சிறை வளாகத்தில் இருந்து காரில் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு புறப்பட்டார். இதேபோல் விடுதலையான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் வெளியே வந்தனர்.

உற்சாக வரவேற்பு


கறுப்பு பூனை பாதுகாப்பு படையினர் புடை சூழ ஜெயலலிதாவின் கார் விமான நிலையம் நோக்கி விரைந்தது. புன்னகையுடன் காணப்பட்ட ஜெயலலிதா எப்போதும் போல் உற்சாகமாக இருந்தார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் காரில் இருந்தனர். மற்றொரு காரில் சுதாகரன் சென்றார்.

ஜெயலலிதாவின் காரை பின்தொடர்ந்து பாதுகாப்பு படை வாகனங்கள், முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரது கார்கள் அணிவகுத்து சென்றன.

ஜெயலலிதாவை வரவேற்க பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இருந்து எச்.ஏ.எல். விமான நிலையம் வரை ஆங்காங்கே சாலையின் இருபுறமும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.

அவர்கள் கட்சி கொடியை அசைத்தும், ஜெயலலிதாவின் உருவப்படங்களை ஏந்தியும் ‘அம்மா வாழ்க!’ ‘புரட்சித்தலைவி வாழ்க!’ ‘தங்கத்தலைவி வாழ்க!’ என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

அவர்களை பார்த்து ஜெயலலிதா கை கூப்பி வணங்கியபடி சென்றார். விமான நிலைய ரோட்டில் சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவின் கார் மீது மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். அப்போது லேசாக மழை தூறிய போதிலும், அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களை நோக்கி ஜெயலலிதா கை அசைத்தபடியும், கைகூப்பி வணங்கியபடியும் சென்றார்.

ஜெயலலிதாவின் விடுதலையை தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

சென்னை வந்தார்


பிற்பகல் 3.20 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, 3.55 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து 4.20 மணிக்கு தனி விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை புறப்பட்டார். அதே விமானத்தில் சசிகலா, இளவரசி ஆகியோரும் வந்தனர்.

ஜெயலலிதாவை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, மந்திரிகள் நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழியனுப்பிவைத்தனர்.

ஜெயலலிதா வந்த தனி விமானம் மாலை 4.50 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.

விமான நிலையத்தில் ஜெயலலிதாவை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், தே.மு. தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க் கள் மா.பா.பாண்டியராஜன், அருண்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையில் உற்சாக வெள்ளம்


வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா அங்கிருந்து காரில் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டார். காரின் முன் இருக்கையில் அவர் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

ஜெயலலிதாவின் காரை தொடர்ந்து ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றன.

ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்து சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். ஜெயலலிதாவின் கார் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகம் மிகுதியால் துள்ளிக்குதித்து ஆரவாரமிட்டனர்.

ஜெயலலிதாவின் வாகனத்தின் மீது பூக்களை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் திரண்டு இருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெயலலிதா புன்னகையுடன் இரு விரல்களை காட்டியபடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி சென்றார்.

தொண்டர்களின் அன்பு மழையில் நனைந்தபடி ஜெயலலிதா மாலை 6.02 மணிக்கு போயஸ் கார்டன் இல்லம் வந்தடைந்தார். அங்கும் ஏராளமாக தொண்டர்கள் திரண்டு இருந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக