கொழும்பு, நவ.15-
ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.
5 பேருக்கு தூக்கு தண்டனை
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கை மீனவர்கள் இருவரும் கைதானார்கள். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த மாதம் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.
இதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசியல் கட்சிகள் மத்திய அரசை வற்புறுத்தின. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
இந்தியா மேல்முறையீடு
இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து, 5 மீனவர்களையும் தமிழக சிறைக்கு மாற்ற ராஜபக்சே சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பு நகரில் உள்ள இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசின் சார்பில் கடந்த 11-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த அப்பீல் வழக்கு நடைபெறுவதை அதிபர் ராஜபக்சே விரும்பவில்லை. பொதுமன்னிப்பு வழங்கி 5 மீனவர்களையும் விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்த அவர், அதற்கு முன்னதாக இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார்.
விடுதலை செய்ய முடிவு
இந்த நிலையில், 5 மீனவர்களையும் விடுதலை செய்ய அதிபர் ராஜபக்சே சம்மதம் தெரிவித்து விட்டதாக நேற்று தகவல் வெளியானது.
இதுபற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், உவா மாகாண உள்கட்டமைப்பு துறை மந்திரியுமான செந்தில் தொண்டமான் ‘தந்தி‘ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், கால்நடை அபிவிருத்தி துறை மந்திரியுமான ஆறுமுக தொண்டமானும், நானும் அதிபர் ராஜபக்சேயை சந்தித்து, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பேசினோம். அப்போது, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் ஏற்கனவே 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களது தண்டனையை குறைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இந்திய பிரதமர் மோடியும் ஏற்கனவே இதேபோல் கேட்டுக் கொண்டு உள்ளார்.
ராஜபக்சே ஆணை
அதன் அடிப்படையில், மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான ஆணையை அரசு அதிகாரிகளுக்கு அதிபர் ராஜபக்சே வழங்கி உள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி, கோர்ட்டு விதித்த தண்டனையை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தால், அதிபர் தலையிட முடியாது. தற்போது, மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மனு இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதிபர் அதில் தலையிடுவதில் சிக்கல் உள்ளது.
மனுவை வாபஸ் பெற யோசனை
எனவே அந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுமாறு இந்திய தூதரக அதிகாரிகளை இலங்கை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது.
இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றவுடன், சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள். அனேகமாக வருகிற திங்கட்கிழமைக்குள் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு செந்தில் தொண்டமான் கூறினார்.
எனவே, இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதும், 5 மீனவர்களும் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் திரும்புவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக