சனி, 13 டிசம்பர், 2014

Mauritius Elections : மொரிஷியஸ் அனிருத் ஜக்நாத் வெற்றி !

மொரிஷியஸ் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. புதிய பிரதமராக 84 வயது அனிருத் ஜக்நாத் பதவி ஏற்கிறார்.



பாராளுமன்ற தேர்தல்

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மொரிஷியஸ். இந்த நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கும் மேற்பட்டோர் இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.

இங்கிலாந்தின் காலனியாக திகழ்ந்து வந்து, 1968-ம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் பெற்றது. அங்கு 62 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடந்தது.

எதிர்க்கட்சி வெற்றி

அந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பிரதமர் நவீன் சந்திர ராமகூலம் தலைமையிலான ‘பிடிஆர்-எம்எம்எம்’ கூட்டணி வெறும் 13 இடங்களை மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தது.

84 வயதான அனிருத் ஜக்நாத் தலைமையிலான ‘அலையன்ஸ் லெப்-அப்’ எதிர்க்கட்சி அணி, 47 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஓபிஆர் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.

தோல்வியை ஏற்றார் ராமகூலம்

இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பிரதமர் நவீன் சந்திர ராமகூலம், தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் தேசிய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.

அப்போது அவர், “வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி புதிய ஆட்சியை தேர்வு செய்துள்ளனர். நான் மெத்தப்பணிவுடன் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஜனாதிபதியை சந்தித்து எனது ராஜினாமாவை அளிப்பேன்” என கூறினார்.


இந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ‘அலையன்ஸ் லெப்-அப்’ அணியின் தலைவர் அனிருத் ஜக்நாத் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இவர் ஏற்கனவே அங்கு 1982-1995, 2000-2003 காலகட்டங்களில் பிரதமர் பதவி வகித்துள்ளார். 11 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 2003-ம் ஆண்டு இவர் அந்த நாட்டின் அதிபர் பதவியையும் வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் தேசிய தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “நான் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கிறேன். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நமது நாட்டில் இரண்டாவது பொருளாதார அதிசயத்தை நடத்திக்காட்டுவேன்” என கூறினார்.

கருத்துகள் இல்லை: