வியாழன், 21 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் !!!




இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இதில், பங்கேற்ற 47 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 26 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 13 நாடுகள் வாக்களித்தன. இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
 
ஜெனிவாவில் இன்று அமெரிக்கத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் திருத்தப்பட்ட தீர்மானத்தின் நகல் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டது.

இதன் மீதும் சில நாடுகள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தன. பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்ட்ரியா, அர்ஜெண்டினா, பிரெசில், சிலி, கோட் திவோர், பெனின், லிபியா, சியரா லியோன், ஜெர்மனி, அயர்லந்து, இத்தலி, ஸ்பெயின், ஸ்விசர்லந்து, செக் குடியரசு, எஸ்டோனியா, மாண்டி நிக்ரோ, போலந்து, மால்தேவா குடியரசு, ருமேனியா, கவுதமாலா, பெரு, கொரியா, கோஸ்ட ரிகா ஆகிய நாடுகள் வாக்களித்தன.

அதே சமயத்தில், பாகிஸ்தான், காங்கோ, மவுரிடேனியா, உகாண்டா, ஈக்வெடார், வெனிசுவேலா, இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவு, பிலிப்பின்ஸ், கத்தார், தாய்லந்து, ஐக்கிய அரசு குடியரசு ஆகிய நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

ஜப்பான், போட்ஸ்வானா, புர்கினோ ஃபாசோ, எத்தியோபியா, கஜகஸ்தான், மலேசியா, அங்கோலா, கென்யா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 8 வாக்குகளும் முதலில் பதிவாகின. மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46 மட்டுமே வந்தது. உறுப்பு நாடுகளில் ஒன்றான கபோன், கடைசியாக தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களித்ததால், ஆதரவு நாடுகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

கருத்துகள் இல்லை: