வெள்ளி, 25 ஏப்ரல், 2014

TN Vote : 72.8% தமிழகம், புதுச்சேரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது; மொத்தம் 72.83 சதவீத ஓட்டுகள் பதிவானது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று 24/04/2014 தேர்தல் நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72.83 சதவீத ஓட்டுகள் பதிவானது. பாராளுமன்றத்துக்கு 6-வது கட்ட தேர்தலாக தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. விறுவிறுப்பான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் காலை முதலே ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்கு அளித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்கு அளித்ததால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேரம் ஆக ஆக வெயில் அதிகரித்ததால், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தது. பின்னர், பிற்பகல் 4 மணிக்கு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால், வாக்குப்பதிவு மீண்டும் சுறுசுறுப்படைந்தது. சரியாக மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அப்போது வாக்குச்சாவடிகளின் முன்பு வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். இதனால் சில வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. முதல் முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் உற்சாகத்துடன் அதிக அளவில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். இதேபோல வயதானவர்கள் கூட தங்கள் உடல்நலம் பற்றி கவலைப்படாமல் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டதை பார்க்க முடிந்தது. தேர்தலுக்காக விடுமுறை விடப்பட்டு இருந்ததால் அனைத்து தரப்பினரும் பெரும் அளவில் வந்து ஓட்டு பதிவு செய்தனர். 73 சதவீதம் தமிழ்நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது மிக அதிகமாக 76.59 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 72.46 சதவீத ஓட்டு பதிவானது. நேற்று நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 72.8 சதவீத ஓட்டுகள் பதிவானது. தர்மபுரி தொகுதியில் மிக அதிக அளவாக 81.15 சதவீத ஓட்டு பதிவானது. தென்சென்னையில் மிக குறைந்த அளவாக 59.86 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது. அமைதியாக நடந்தது தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாததால் போலீசார் நிம்மதி அடைந்தனர். தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:- 1. திருவள்ளூர் (தனி)-74.75 2. வடசென்னை-64.63 3. தென்சென்னை-59.86 4. மத்திய சென்னை-62.25 5. ஸ்ரீபெரும்புதூர்-67.68 6. காஞ்சீபுரம் (தனி)-75.2 7. அரக்கோணம்-77.77 8. வேலூர்-72.32 9. கிருஷ்ணகிரி-77.74 10. தர்மபுரி-81.15 11. திருவண்ணாமலை-78 12. ஆரணி-78.66 13. விழுப்புரம் (தனி)-76.02 14. கள்ளக்குறிச்சி-78 15. சேலம்-77.29 16. நாமக்கல்-80 17. ஈரோடு-75.61 18. திருப்பூர்-76.27 19. நீலகிரி (தனி)-74.3 20. கோயம்புத்தூர்-68.94 21. பொள்ளாச்சி-72.84 22. திண்டுக்கல்-78.29 23. கரூர்-80.33 24. திருச்சி-70.43 25. பெரம்பலூர்-80.12 26. கடலூர்-80.15 27. சிதம்பரம் (தனி)-79.85 28. மயிலாடுதுறை-80 29. நாகப்பட்டினம்(தனி)-78 30. தஞ்சாவூர்-77 31. சிவகங்கை-72 32. மதுரை-67.90 33. தேனி-74 34. விருதுநகர்-75.48 35. ராமநாதபுரம்-70 36. தூத்துக்குடி-69.90 37. தென்காசி(தனி)-74.3 38. திருநெல்வேலி-67.40 39. கன்னியாகுமரி-68 40. புதுச்சேரி-82.15 மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி Ôசீல்Õ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில், 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 3 மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. நாடு முழுவதும் இன்னும் 3 கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. அந்த தேர்தல்கள் மே மாதம் 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 16-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவுகள் தெரியத் தொடங்கிவிடும். பிற்பகலுக்குள் கிட்டத்தட்ட முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: