சனி, 23 மே, 2015

ஜெயலலிதா பதவியேற்பில் அரங்கேறிய வினோதங்கள்..!

ஜெயலலிதா இன்று 5 ஆவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழாவில், சில வினோத நிகழ்வுகள் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. அவருடன்  2 பெண்கள் உட்பட 28 பேர் அமைச்சர்களாக  கூட்டாக ஒரே நேரத்தில் பதவியேற்றனர். அவர்களுக்கு பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் ஆளுநர் ரோசய்யா செய்து வைத்தார்.

முன்னதாக, ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப்  பிரமாணமும் ஆளுநர் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியை வாசித்த ஜெயலலிதா, ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி கூறுவதாகக் கூறி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா பச்சை நிற சேலையும்,பச்சை நிற மோதிரமும் அணிந்து இருந்தார்.அதே போல பச்சை நிற பேனா மூலம் கையெழுத்திட்டார். 

இதற்கு முந்தைய பதவி ஏற்பு நிகழ்வுகளில் முதல்வரைத் தொடர்ந்து  அமைச்சர்கள்  தனித்தனியாக ‘மைக்’ முன் வந்து பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆளுநர் தனித்தனியாகப்  பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

ஆனால் இன்று நடந்த பதவி ஏற்பு விழாவை விரைந்து முடிப்பதற்கு வசதியாக 28 அமைச்சர்களும் மொத்தமாக பதவி ஏற்றுக் கொண்டனர். 28 அமைச்சர்களும்  இரு குழுக்களாக பிரிந்து மேடையின் இருபுறமும் நின்று பதவி ஏற்றுக் கொண்டனர். 

அவர்கள் பதவி ஏற்க வசதியாக 10 க்கும் மேற்பட்ட மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் 10 நிமிடங்களுக்குள் 28 அமைச்சர்களும் பதவி ஏற்க முடிந்தது. அதன்பிறகு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். 20 நிமிடங்களில் விழா எளிமையாக முடிந்தது.

முன்னதாக விழா தொடங்கும் போது நிகழ்ச்சித் தொகுப்பாளர்,  'விழா முறைப்படி தொடங்குகிறது.முதலில் தேசிய கீதம் சுருக்கமாக... அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து!` என்று அறிவிப்பு செய்தார். அரசு நிகழ்வு ஒன்றில் தேசிய கீதம் சுருக்கமாக இசைக்கப்பட்டது குறித்து  பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை: