செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

யாழ்ப்பாண மாவட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி

தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கிளிநொச்சி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, உடுப்பிட்டி, சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டை ஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 20 தொகுதிகளில், 14 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில்16ஐத் தொடக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.

தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,

யாழ். மாவட்டத்தில் 5 இடங்களும்,
வன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.

இவை தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்
அம்பாறை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பது உறுதியாகிவிட்டதாக பிபிசி தமிழோசையின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றால் அதற்கு தேசியப்பட்டியலில் குறைந்தது ஒரு இடம் கிடைக்கும் என்றும், அது சில வேளை இரண்டு இடங்களாக அதிகரிக்கலாம் என்றும் நமது செய்தியாளர் குறிப்புணர்த்துகிறார்.

உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாங்கிய ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இந்தத் தேர்தலில் அதிகரித்திருப்பதாகவே இதுவரையிலான தேர்தல் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டு அளவுகோள்களின் கீழும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமான தனது ஆதரவை தக்கவைத்துக்கொண்டது மட்டுமல்ல, அதிகரித்திருப்பதாகவுமே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.


--------thanks பிபிசி தமிழோசை

கருத்துகள் இல்லை: