செவ்வாய், 6 டிசம்பர், 2016

TN CM JJ தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா
# ஜெயலலிதா
#JAYALALITHA
#RIP

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

திடீர் மாரடைப்பு
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது.

உயிரை காப்பாற்ற முயற்சி
இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாலை 4.40 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் டாக் டர்கள் குழுவினர் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மாலை 5.30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஜெயலலிதா மரணம்
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இரவு 11-30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் சில அறிவுறுத்தல்கள் உள்ளன.

இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், மாநில முதல்-அமைச்சர் இறந்தது உறுதியானவுடன், அந்த மாநில கவர்னரும் அதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உறுதி செய்து கொண்ட பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு நள்ளிரவு அல்லது அதிகாலை கவர்னர் அல்லது தலைமைச் செயலாளர் முறையாக, முதல்-அமைச்சர் இறந்த தகவலை மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பார்.

இந்த வழிமுறையின்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தி நள்ளிரவு 12-15 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு 11-30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதே சமயம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் ஜெயலலிதா காலமானார் என்ற அறிவிப்பு வெளியானது.

தொண்டர்கள் கதறல்
அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். துக்கத்தை தாங்க முடியாமல் அவர்கள் முகத்திலும், தலையிலும் அடித்துக்கொண்டு ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதார்கள். சில பெண்கள் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்த தகவல் வெளியானதும் சென்னை நகரில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீரும், கம்பலையுமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியை நோக்கி கதறி அழுதபடி சாரை, சாரையாக வந்தனர். போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நோக்கியும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.

காட்டுத்தீ போல் பரவியது
ஜெயலலிதா இறந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், பெரும் சோகமும் அடைந்தனர். பலர் துக்கம் தாங்க முடியாமல் கதறி துடித்தனர். ஜெயலலிதாவின் புகைப்படங்களை தெருக்களில் ஆங்காங்கே அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்த தொடங்கினார்கள்.

கருத்துகள் இல்லை: