புதன், 7 டிசம்பர், 2011

நல்லுறவைக் கெடுக்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

தினத்தந்தி




தினமணி

சென்னை, டிச.6:

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைக் காரணம் காட்டி, தமிழக-கேரள மாநில மக்களிடையேயான நல்லுறவைக் கெடுக்க வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக தேவையற்ற கருத்துகளைத் தவிர்க்கும்படியும் தமிழக அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: "சபரிமலைக்குச் சென்ற தமிழக பக்தர்களைக் கேரள மாநிலத்ததவர் தாக்கியதாகச் செய்திகள் எனது கவனத்துக்கு வந்துள்ளன. தமிழக அரசின் பதிவெண் கொண்ட வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, கேரளத்தில் உள்ள தமிழர்களின் வணிக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், பணி நிமித்தமாக அங்கு வசிப்பவர்கள் என அனைவரும் மிரட்டப்படுகின்றனர். அவற்றுக்கெல்லாம் காரணம், இரு மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையாகும்.குறுகிய மனப்பான்மை கொண்ட சில சமூக விரோத சக்திகளின் தவறான பிரசாரத்துக்கு கேரளத்தில் உள்ள படித்த மற்றும் அறிவாளியான மக்கள் இரையாகிவிடக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைக் காட்டி, வன்முறைச் சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை, கற்பனையானவை, நிரூபிக்கப்படாத கூற்றுகளால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற அச்சமாகும். அரசியல் ஆதாயங்களுக்காக அதுபோன்ற கருத்துகள் பரப்பப்படுகின்றன.

அணை உடையுமா:
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்றோ அல்லது அது உடைந்து இடுக்கி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மூழ்கும் என்றோ நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அணை அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையில் தேவையான காலத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அணை பாதுகாப்பாக உள்ளது. அணையின் ஸ்திரத் தன்மையை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு ஆய்வு செய்துள்ளது. அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை 116 ஆண்டுகள் பழமையானது என்பதால் அதன் உறுதித்தன்மை குறித்து ஐயப்பாடு எழுப்பப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கல்லணையானது, உலகத்திலேயே மிகவும் பழமையான அணையாகும். காவிரி ஆற்றின் குறுக்கே கரிகால் சோழனால் அந்த அணை கட்டப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை முழுப் பாதுகாப்புடன் இருக்கிறது. கல்லணையானது சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டது. அது உறுதித் தன்மையுடன் இருக்கிறது. இதேபோன்றுதான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையானது பழமையான முறையில் கட்டப்பட்டது என்றோ, அதிக ஆண்டுகள் ஆகியுள்ளதால் இடிந்துவிடும் என்றோ அச்சப்படுவது தேவையற்றது.


அணை நீண்ட காலம் நல்ல முறையில் பயன்படும் என்பதால்தான் அப்போதைய சென்னை மற்றும் திருவாங்கூர் மாகாணங்களுக்கிடையே 999 ஆண்டுகளுக்குத் தண்ணீர்ப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

நிலநடுக்கப் பகுதியில் அணை இருப்பதாகக் கூறப்படும் வதந்தியின் காரணமாக மக்களிடையே மிகப்பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் தொடர்பான வரைபடம் இணையதளத்தில் அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலம் முழுவதும், சென்னை உள்பட இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளும் நில நடுக்க மண்டலம் 3-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சாதாரண நில அதிர்வுகள் மட்டுமே ஏற்படும்; அந்த நில அதிர்வுகள் கூட ரிக்டர் அளவுகோலில் அரிதாகவே 3 அலகுகளைத் தாண்டும். ரிக்டர் அளவுகோலில் 2 முதல் 2.9 அலகுகள்வரை பதிவாகும் நில அதிர்வுகள் பொதுவாக உணரப்படுவதில்லை; அவை வெறுமனே பதிவு மட்டுமே செய்யப்படுகின்றன. வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரங்களின்படி, அத்தகைய நில அதிர்வுகள் உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிஷமும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 3 முதல் 3.9 அலகுகள் வரை பதிவாகும் நில அதிர்வுகள் பெரும்பாலும் உணரப்படும், ஆனால் அரிதாகவே பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபோன்ற நில அதிர்வுகள் கூட அடிக்கடி ஏற்படுபவைதான் என்பதால், இதில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனவே, நில நடுக்கத்தின் காரணமாக முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்ற அச்சம் எந்த அடிப்படையும் இல்லாதது.

இந்த உண்மைகள் கேரளத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தவைதான். இருந்தாலும், அரசியல் ஆதாயத்துக்காக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் அச்ச உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் தமிழகத்தின் நெருங்கிய அண்டை மாநிலம் ஆகும். குறிப்பாக 1950 வரை இரு மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. மலையாளிகளும், தமிழர்களும் பொதுவான மொழி, கலாசாரத்தைக் கொண்டவர்கள். கேரளத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான மலையாளிகள் வசிக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் இருதரப்பினரும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் பேரழிவுக்குள்ளாக வேண்டும் என்று கருதும் கடைசி நபர்களாக தமிழக அரசும், தமிழக மக்களும் இருப்பார்கள். எங்களிடம் முழுமையான ஆதாரங்கள் இல்லையென்றால், அந்த அணை பாதுகாப்பாக உள்ளது என்று கூறமாட்டோம்.


கேரள மக்களுக்கு வேண்டுகோள்:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவைக் கெடுக்கும் வகையிலான செயல்களுக்குக் கேரள மக்கள் உடன்பட வேண்டாம். கற்பனையான ஒரு விஷயத்துக்காக வன்முறையிலோ, மோதல் சம்பவங்களிலோ ஈடுபட வேண்டாம். இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவு, நல்லெண்ணம் ஆகியவற்றைப் பாழாக்கி விடக்கூடாது. புத்திகூர்மை, கல்வி, கடின உழைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள - நான் என்றென்றும் மதிப்பு வைத்துள்ள - கேரள மக்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன்.


கட்சிகளுக்கு கோரிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் இரு மாநில மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுகளைத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். பத்திரிகைகளும் இந்த விஷயத்தில் நடுநிலையோடும், சுயக்கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்
.


Thanks to Dinamani .

கருத்துகள் இல்லை: