புதன், 16 அக்டோபர், 2013

65 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும் ! முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்


இலங்கை சிறையில்  உள்ள  65 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும் !  முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல் .








கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.  

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

அவர்கள் உள்பட இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“இலங்கை கடற்படையினரால் 14 ஆம் தேதி அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை, உங்கள் கவனத்திற்கு மீண்டும் வருத்தத்துடன் கொண்டு வருகிறேன். இலங்கை கடற்படையினரால் நம் மீனவர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்த பிரச்சனையில் மத்திய அரசு உணர்ச்சிபூர்வமற்ற நிலையையும், மென்மையான, மெத்தனமான போக் கையும் கடைப்பிடிக்கிறது.


வாழ்வாதாரத்திற்காக, அமைதியான முறையில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலை மேற்கொண்டுள்ள இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் கொடூரமான தாக்குதல்கள் அடிக்கடி தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு இதுதான் காரணமாக உள்ளது.

14 ஆம் தேதி நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 22 மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளுடன் பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்த போது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் விசாரணைக்காக தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 15 மீனவர்கள் 4 விசைப்படகுகளுடன் பாக்.ஜலசந்தி பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற கொடூர தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர, தூதரக ரீதியிலான முயற்சிகளை எடுக்காமலும், இந்தியாவின் உறுதியான எதிர்ப்பை இலங்கை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்காமலும் மத்திய அரசு, மெத்தனப்போக்குடன் செயல்படுவதால், மீனவர்கள் கடத்தப்படுவது, கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நீடிக்கிறது.

மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து உங்களுக்கு நான் எழுதிய எந்த கடிதங்களுக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனையான இந்த பிரச்சினை குறித்து, அண்மையில், இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பேச்சு நடத்தி, அதுதொடர்பான அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அதில் சற்று அர்த்தம் இருந்திருக்கும்.

இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகை ஏற்பட்டிருக்கும். ஆனால், மீனவர்கள் மீதான இந்த மனவேதனை அளிக்கக்கூடிய தாக்குதல் பிரச்சினையை கையாளுவதில், இயல்பான, உணர்ச்சிபூர்வமற்ற, பாரபட்சமான வகையில் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது என்பதே எனது கருத்து.



இந்திய கடல்பகுதியில் குஜராத் மீனவர்கள் மீது சமீபத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு அவர்கள் மீது காட்டிய அக்கறையை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, காட்ட தவறியுள்ளது.  

இது ஒருதலைப்பட்சமாகவும், மாற்றான்தாய் மனப்பான்மையுடனும் மத்திய அரசு நடந்து கொள்வதையே காட்டுகிறது.

பாகிஸ்தான் அரசின் துணைத்தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி, குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, கடுமையான கண்டனத்தையும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில், மத்திய அரசு, எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து மெத்தனப் போக்கையும் அக்கறையின்மையையும் கடைபிடித்து வருகிறது.

இதனால், பாக்.ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே அன்னியர்கள்போல் உணர்வதாகவும், சொந்த நாடே தங்களை கைவிட்டு விட்டது என்பதுபோலவும் கருதுகின்றனர்.

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில், பிரதமர் தலையிட வேண்டும். இதில் உறுதியான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்திற்கு அவர் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 37 மீனவர்கள் உட்பட 65 தமிழக மீனவர்களையும், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களின் 35 படகுகளையும் விடுவிக்க, அந்த அரசை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கடலில் மீன்பிடித்து வரும் அப்பாவி ஏழை தமிழக மீனவர்களுக்கு எதிராக, இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தொடர் தாக்குதல்களை உறுதியான முறையில் தடுத்து நிறுத்தும்படி, இலங்கை அரசை கடுமையாக வற்புறுத்த வேண்டும்”.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~``  

கருத்துகள் இல்லை: