திங்கள், 16 பிப்ரவரி, 2015

இந்தியா - இலங்கை இடையே 4 புதிய ஒப்பந்தங்கள் !

இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட 4 புதிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இடையிலான பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்த இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். பிரதமர் அளித்த மதிய விருந்தில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். இருதரப்பு உறவுகள் குறித்து அப்போது இருவரும் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இந்தியா - இலங்கை இடையே, 4 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது. அணுசக்தி ஒத்துழைப்பு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இலங்கையின் பங்களிப்பு, விவசாயம் மற்றும் கலாசாரத்துறை ஆகியவற்றில் புதிதாக 4 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் சிறிசேனாவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கை அரசு தனது முதலாவது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில், இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இருநாட்டு மீனவர்களும் விரைவில் பேச்சு நடத்துவார்கள் எனக் குறிப்பிட்டார். பின்னர் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, இந்தியா - இலங்கை இடையே நீண்டகாலமாக நெருங்கிய நட்புறவு இருப்பதாக தெரிவித்தார். இந்தியா - இலங்கை இடையே பல ஒப்பந்தங்கள் அமலில் இருந்தாலும், புதிதாக 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுப்படும் என  சிறிசேனா குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை: