ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கச்சதீவை மீட்போம் ஜெயலலிதா சூளுரை

சென்னை: 


கச்சதீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  


அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு      இடம்பெற்ற, தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜெயலலிதா  இவ்வாறு சூளுரைத்தார். அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்;  பாக்கு நீரிணைப் பகுதியில் கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அவ்வாறு, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன். 

 ஆனால், முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி, மீனவர்கள் பேராசையினால் தான் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்கின்றனர் என்று மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார் என்பதை மறந்துவிடாதீர்கள்.  கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தாலும், இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுப்பதில்லை. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி படகுகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.  இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான்.  


இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தான் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.  

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது தான், 1974 ஆம் ஆண்டு இந்திய  இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது.  இதைத் தடுப்பதற்கு தேவையான எந்தவித நடவடிக்கையும் கருணாநிதி அப்போது எடுக்கவில்லை. அப்போதே இது தொடர்பாக கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பாரேயானால் உச்சநீதிமன்றம் மூலம் கச்சதீவு 
இலங்கைக்கு தாரை வார்த்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை பெற்றிருக்க முடியும். பின்னர், வாதங்களின் மூலம் நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டியிருக்க முடியும்.  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படும் நிலை எழாமலே இருந்திருக்கும். 

ஆனால், கருணாநிதி அவ்வாறு உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்.  கச்சதீவுப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்று மீனவர்கள் பயன் பெற வேண்டும் என்பது தான் என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாடு.  


எனவே தான் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு நாட்டு மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் கொழும்பு நகரில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாரம்பரிய மீன்பிடி உரிமை வலியுறுத்தப்பட்டதுடன், தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்படும் மீனவர்கள் படகுகளுடன் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மீன்பிடி முறைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  இருப்பினும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்த முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சதீவு மீட்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை நான் உறுதிபட இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன் என்றார். - See more at: http://www.thinakkural.lk/article.php?world/fgoadwoge01367a223c6b37113712mxuer0f85df22e9377d6c4f7553makqz#sthash.hRkPyvNO.dpuf

கருத்துகள் இல்லை: