வெள்ளி, 20 மே, 2016

DMK : 10 FACTS ஆட்சி அரியணையை தி.மு.க. ஏன் எட்டிப் பிடிக்கவில்லை? - இந்த 10 விஷயங்கள்தான் காரணமா?

Thanks VIKATAN

------------------------------------------------------------------------


ஆட்சி அரியணையை தி.மு.க. ஏன் எட்டிப் பிடிக்கவில்லை? - 

இந்த 10 விஷயங்கள்தான் காரணமா?























டைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மிக வலுவான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. அண்ணாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. 

போட்டியிட்ட முதல் பொதுத்தேர்தலில் (இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தல்) 15 இடங்களை பிடித்து காங்கிரசுக்கு கிலி கொடுத்தது அண்ணாவின் தலைமையிலான திமுக. எந்த காங்கிரசை எதிர்த்து அரசியல் புரிந்து அரியணை ஏறியதோ, அதே காங்கிரசுடன் இணைந்து 1971 தேர்தலை சந்தித்தது திமுக.
 
திமுகவின் வெற்றி தோல்விகளில் இத்தகைய முரண்பாடுகள் நிறைய உண்டு. 'ஒட்டும் இல்லை உறவும் இல்லை' என 2014 ல் துாக்கி எறிந்த காங்கிரசுடன் இந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது வரை அதனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
 
இந்நிலையில் கோட்டையில் கொடி ஏற்றும் வாய்ப்பை திமுக கோட்டை விட்டதற்கான 10 காரணங்கள் இவை...தொகுதிக்கு தக்கபடி காரணங்கள் பொருந்தும்.
 
1. குலைந்த கட்டுக்கோப்பு
 
திமுக,  அண்ணா மற்றும் கருணாநிதியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தவரை கட்சியின் கட்டுக்கோப்பு பாராட்டும்படி இருந்தது. 

மதுராந்தகம் ஆறுமுகம் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக இருந்தபோது அவர்தான் அந்த மாவட்டத்தின் 'கருணாநிதி'. அதாவது மாவட்டத்தில் எதிர்கோஷ்டி என்ற ஒன்று உருவாகிவிடாமல் பார்த்துக்கொள்வார். எங்காவது சலசலப்பு கேட்டால் அந்த சலசலப்பு வந்த இடத்திற்கு தொடர்ந்து படையெடுப்பார். 'சாம தான பேத தண்டம்' என எந்த வழிகளிலாவது அதை அடக்கி ஒடுக்கிவிடுவார். தலைமை மீது அந்த கோஷ்டிக்கு ஏதேனும் அதிருப்தி இருந்தால், அடுத்தவாரமே அவர்களை தலைமையிடம் கொண்டுபோய் நிறுத்தி, கருணாநிதியை சந்திக்க வைத்து சமாதானம் செய்து அனுப்பிவைப்பார். 

இப்படி கட்சியினரை ஒருங்கிணைப்பதன் மூலம் கட்சியை காப்பாற்றிவந்தனர் அக்காலத்தில். ஆனால் இப்போது எதிர்கோஷ்டி உருவானால் அதை அடக்கி ஒடுக்குவதோ அல்லது அவர்களை அரசியலிலிருந்தே அப்புறப்படுத்திவிடுவதோ நடக்கிறது. இதற்கான முயற்சிகளில் கட்சி பலியாகிவிடுகிறது தேர்தல் சமயங்களில்.
 
2. தீர்மானத்தை தவிர்த்த லாபி
 
திமுக கடந்த பொதுக்குழுக் கூட்டமொன்றில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என தீர்மானம் ஒன்று நிறைவேறியது. காரணம் மாவட்டச் செயலாளர்களும் களம் கண்டால் குறிப்பிட்ட அந்த தொகுதியின் மீதே அவரது கவனம் இருக்கும். மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளின் மீதான கவனம் குறையும். இது மற்ற தொகுதிகளின் வெற்றியை பாதிக்கும் என்பதே இந்த தீர்மானத்தின் பின்னணி. ஆனால் லாபி செய்து, இந்த தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டுவராமல் செய்துவிட்டனர் மாவட்டச் செயலாளர்கள். அச்சப்பட்டபடியே தேர்தல் முடிவு இப்போது வந்திருக்கிறது. ஒருவேளை தீர்மானத்தின்படி நடந்திருந்தால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கருணாநிதி கொடியேற்றியிருப்பார்.
 
3.  பலத்தை குறைத்த விட்டமின் 'ப'
 
ஜனநாயகம் பணநாயகமாக ஆகி பல ஆண்டுகள் ஆகிறது. இதில் எந்தகட்சியும் விதிவிலக்கல்ல...தொகை மட்டுமே மாறுகிறது. 

இந்த முறை ஒவ்வொரு தொகுதிக்கும், திமுக தலைமையிலிருந்து வேட்பாளர் கணக்கில் ஒரு கணிசமான தொகை வரவு வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

பிரச்னை என்னவென்றால், இந்த தொகையில் 90 சதவீதம் தொகையை முதற்கட்ட பிரசாரத்தின்போதே தந்ததுதான்.  


 
இதனால் அடுத்தடுத்த கட்டமாக இன்னும் 'கொஞ்சம்' தலைமையிலிருந்து வரலாம் என்ற கணக்கில் வேட்பாளர்கள் இந்த பணத்தை முதற்கட்டபிரசாரத்தின்போதே கனஜோராக செலவு செய்தனர். தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன் தரப்பட்ட மீதம் 10 சதவீத தொகை பேனர்கள், தொண்டர்களின் உணவு மற்ற செலவுகளுக்கு இருந்த நிலுவைத்தொகையை செலுத்தவே சரியாய்ப் போனது. இதனால் கடைசிக்கட்டத்தில் களத்தில் ஊடுருவி வேலை செய்ய முடியாத தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிட்டனர் உடன்பிறப்புகள்.  
 
4. அதிருப்தியை களைய ஆட்கள் இல்லை
 
பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்கும் பலரும் தலைமையிடம் 'சீட்' கேட்பர். வேட்பாளர் அறிவிப்புக்குப்பின் தலைமை எடுக்கும் முதல் நடவடிக்கை, 'சீட்' கிடைக்கப் பெறாதவர்களை அழைத்து சமாதானம் செய்வதுதான். சம்பந்தப்பட்டவரின் உழைப்பை பொறுத்து, அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றோ, அல்லது வேறு ஏதாவது உறுதிமொழியோ தரப்பட்டு சமாதானம் செய்துவைக்கப்படுவர். தலைமையே தன்னை சமாதானம் செய்ததை எண்ணி, அத்துடன் மனமாச்சார்யங்களை மறந்து, வெயில் மழை பாராது கட்சியின் வெற்றிக்கு உழைப்பை செலுத்த ஆரம்பிப்பர். இந்த முறை இது மிஸ்ஸிங். 

'சீட்' கிடைக்கப்பெறாதவர்களை மட்டுமல்ல, மற்ற அதிருப்தியாளர்களைக் கூட சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடச் செய்யும் முனைப்பு கட்சி சார்பிலோ அல்லது மாவட்டச் செயலாளர்கள் சார்பிலோ மேற்கொள்ளப்படவில்லை. அதிருப்தியாளர்களின் சுணக்கம்,  சுமுகமான முடிவை திமுகவுக்கு தராமல் போக காரணமாகிவிட்டது.
 

5. பழிதீர்க்கும் படலம்
 
இந்த முறை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பழிதீர்க்கும் படலம் நடந்தது என்கிறார்கள். அதாவது ஒருங்கிணைந்த மாவட்டங்களில் கோலோச்சிய பல மாவட்டச் செயலாளர்கள், மாவட்டங்கள் பிரிந்தபோது தனக்கான முக்கியத்துவத்தை இழந்தனர். இதனால் தங்களின் பழைய ஹோதாவைப்பெற,  தங்களின் வெற்றியை விட  எதிர்கோஷ்டியின் தோல்வியிலேயே பெரிதும் ஆர்வம் காட்டினர். காரணம் எதிர்கோஷ்டி வென்று,  அமைச்சர்கள் பந்தயத்தில் முந்தி சைரன் காரில் சென்றுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான். இதன் எதிரொலி கட்சித்தலைமையே சைரன் காரை காணமுடியாமல் போய்விட்டது.
 
6. கூடா நட்பு கேடாய் முடிந்தது!
 
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 

பங்காளிகளாக தேர்தலை சந்தித்த திமுக-

காங்கிரஸ் கூட்டணி, வெற்றிக்கோட்டைத் 

தொட முடியவில்லை. 2ஜியும் ஈழ விவகாரமும் 

ஒன்றுசேர,  பாராளுமன்றத் தேர்தலிலும் பல் 

இளித்தது அதன்வெற்றி. 


கூடாநட்பு என்று 

பவ்யமாய் தேர்தலுக்கு முன்பே  மத்திய 

ஆட்சியிலிருந்து வெளியேறியது தி.மு.க. 

அதன்பிறகு பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 

தோற்றதற்கான காரணங்கள் அப்படியே உள்ள 

நிலையில், மீண்டும் காங்கிரசுடன் 

கைகோத்துக்கொண்டது ஏன் என்று இன்னமும் 

பொதுமக்களும், ஏன் சொந்தக்கட்சியினரும் கூட   

புரியாமல் உள்ளனர். மாற்றம் வேண்டும் என்று 

பல கூட்டணிகள், கோஷங்கள் 

எழுப்பிக்கொண்டிருந்த சூழலில், தி.மு.க.-

காங்கிரஸ் கூட்டணி, வாக்காளர் களுக்கு 

பழைய விவகாரங்களை நினைவுபடுத்தி, கூடா 

நட்பு கேடாய் முடிய காரணமாகிவிட்டது.



7. கட்சியா கம்பெனியா?
 
திமுகவின் பல மாவட்டங்கள், கட்சித்தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அதை கம்பெனிகள் போல நிர்வகித்து வருகின்றனர். ஸ்டாலினின் கீழ் செயல்பட்டால்போதும் என அவர்கள் செயல்பட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வெளிப்படையாகவே சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, 'அண்ட் கோ' எனக் கிண்டலடிக்கிற நிலைதான் பல மாவட்டங்களில் உள்ளது. 

மாவட்டச் செயலாளர்கள் மீது முரண்படுகிறவர்களை அழைத்துப் பேசாமல் அல்லது தலைமையிடம் மாவட்டச் செயலாளர்கள் குறித்து புகார் தெரிவிப்பவர்களை, தலைமைக்கே எதிரியாக கற்பித்துக்கொள்கிறது இப்போதுள்ள 'தலைமை'. தி.மு.க. என்ற கப்பல் தரைதட்ட இதுவும் ஒரு காரணம்.
 
8. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இல்லாதது!
 
அண்ணா காலத்திலும், கருணாநிதியின் கையில் கட்சி வந்த பின்னரும் மாவட்டம், நகரம் ஒன்றியம் என தேர்தல் வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைக்க கட்சியின் சீனியர்கள்,  தேர்தல் பணியில் அனுபவம் கொண்ட தலைவர்களை தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக  நியமிப்பர். அதிமுகவில் ஐவர் குழு, நால்வர் குழு என ஒட்டுமொத்த தொகுதிகளுக்குமாக  தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க குழு உள்ளதுபோல,  திமுகவில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை. முன்பு மாவட்டச் செயலாளர்களை, தங்கள் அருகில் உள்ள மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாளராக நியமிப்பர். இது தேர்தல்பணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
 
ஆனால் இப்போது அப்படியில்லை. எல்லாவற்றிற்கும் ஒரே சர்வரோக நிவாரணி அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான். அனுபவஸ்தர்கள், தங்களது ஆதரவாளர்களுக்கு ஆலோசனை தருவதோடு தங்கள் பணியை முடக்கிக்கொண்டுவிட்டனர் இந்த தேர்தலில். கருணாநிதியின் உடல்நிலையால் தொகுதி பிரச்னைகளை அவரிடம் கொண்டு செல்ல முடியவில்லை. ஸ்டாலின் தரப்பிடம் பிரச்னைகளை கொண்டு செல்வதில் பல தடங்கல்கள். இதுவும் வெற்றிக்கோட்டை தொட முடியாமல் போனதற்கு காரணமாகிவிட்டது.
 
9.களப்பணியில் சுணக்கம்
 
திமுகவின் கடந்த தேர்தல் வெற்றிகளுக்கு கடைசி நேர அஸ்திரமாக ஒன்று இருந்தது உண்டு. அது அடிமட்டத்தொண்டன் மூலம் ஏவப்படும். அதாவது தங்கள் வார்டுகளில் உடல்நிலை சரியில்லாத வாக்காளர்களை முன்பே கணக்கெடுத்துக்கொண்டு, தேர்தல் நாளன்று சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ அல்லது தனது இருசக்கர வாகனம் என்று தன் சக்திக்குட்பட்ட வகையில் அவர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டுவருவதில் அக்கறை காட்டுவார்கள் அந்த தொண்டர்கள். அண்ணா காலத்தில் இது கட்சித்தலைமையோ  அல்லது மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தலோ இன்றி தனிப்பட்ட முறையில் தொண்டனின் முயற்சியாக இருந்தது. 

இலங்கையில் பாலம் அமைக்க  ராமனுக்கு அணில் உதவியதுபோன்று, திமுகவின் வெற்றிக்கு ஒரு அணில்போன்ற அடிமட்டத் தொண்டனின் உதவி இது. ஆனால் இம்முறை இந்த வியூகத்தை தி.மு.க. தொலைத்துவிட்டது. பிரசாரத்துடன் தனது பணி முடிந்துவிட்டதாக  மாவட்டச் செயலாளரிலிருந்து கடைசி தொண்டன் வரை முடங்கிக்கொண்டான்.
 

10. மாற்றம் இல்லாத ஏமாற்றம்
 
திமுக என்றால் திருவாரூர் மு. கருணாநிதி என கட்சித் தொண்டர்கள் புளங்காங்கிதம் அடைந்த தொண்டர்களின் காலம் முடிந்துவிட்டதை கருணாநிதி இன்னமும் உணராதது ஆச்சர்யம். கட்சியில் கடந்த 3 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பே, கருணாநிதிக்கு மாற்றாக ஸ்டாலினை முன்னெடுக்கும் முயற்சிகள் கட்சி நிர்வாக மட்டத்தில் உருவாகிவிட்டன. கட்சி மட்டத்திலேயே என்பதைவிட,  கட்சித் தலைமையிலானாலேயே கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின்தான் என்ற பூடக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் இன்றுவரை அது கருத்துவடிவத்திலேயே வெளிப்பட்டுவருவதும் தோல்விக்கு முக்கிய காரணம். கட்சியில் தலைமைப் பதவிக்கு போட்டியற்ற சூழல் உருவாகிவிட்ட இந்த நிலையிலும், இன்னும் ஸ்டாலினுக்கு அதிகாரப்பூர்வமாக தலைமை பொறுப்பு அளிக்காததும் இளைஞர்கள் மத்தியில் ஒரு சுணக்கத்தை தந்தது எனலாம்.
 
பொதுவெளியிலும் ஜனநாயக முறையில் இயங்குவதாக கூறிக்கொள்ளும் ஒரு கட்சியில், தொடர்ந்து 47 ஆண்டுகள் ஒரே தலைமை இருப்பது பொதுவான புதிய தலைமுறை வாக்காளர்களிடம் ஏற்படுத்திய சலிப்பும் இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கூறலாம்!
 
- எஸ்.கிருபாகரன் ( Thanks VIKATAN )




கருத்துகள் இல்லை: