7 பேர் விடுதலை கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து – கோட்டையை நோக்கிப் பேரணி!
சென்னை – ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையைக் கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து புறப்பட்ட பேரணி பிற்பகல் 3.00 (இந்திய நேரம்) அளவில் சென்னை கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று வேலூரில் இருந்து, சென்னை கோட்டை நோக்கி வாகனப் பேரணியாக நடைபெறவிருந்த இந்தப் பேரணி இறுதி நேரத்தில் காவல் துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க, தொடங்கும் இடம் சென்னையிலேயே இராஜரத்தினம் அரங்கம் என மாற்றப்பட்டது.
கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பேரணியில் பல திரைப்பட இயக்குநர்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறைவாசம் அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பேரணி முடிவடையும்போது, பேரணியின் பிரதிநிதிகளை தமிழக அரசு சார்பில் சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால், ஜெயலலிதா நேரடியாக பேரணி பிரதிநிதிகளைச் சந்திப்பாரா அல்லது அவரது அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் பெற்றுக் கொள்வார்களா என்பது இன்னும் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக