ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

2016 எழுக தமிழ்



இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது பேரெழுச்சி கொண்ட “எழுக தமிழ்” வரலாறாகியது
2016-09-25 10:26:37
தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசுக் கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று யாழில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அணிவகுப்பில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப் பட்ட இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரணியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னின்று ஆரம்பித்து வைத்திருந்ததுடன், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறுபட்ட தரப்பினரும் தமது பேராதரவை வழங்கியுள்ளனர்.   

தமிழ் மக்கள் பேர வையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் ஆதரவுடன் \'எழுக தமிழ்” மக்கள் எழுச்சி பேரணி வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பேராதரவுடன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. 

இப் பேரணியை யாழ் நல்லூர் கந்த சுவாமி ஆலய முற்றத்தில் இருந்தும் யாழ் பல்கலைக்கழக பர மேஸ்வரன் ஆலய வளாகத்தில் இருந்தும் இரு அணிகளாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். 

நல்லூரில் இருந்து ஆரம்பித்த பேரணியில் மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் யாழ் பல்கலையில் ஆரம் பிக்கப்பட்ட பேரணியில் மத குருமார்கள், பல்கலை கழக பேராசிரியர்கள், மாணவர்கள் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பெரும் பேரணியாக சென்றனர்.

பேரணியின் இரு அணியினரும் கந்தர்மடச்சந்தியில் சந்தித்து ஒன்றாக தமது உரிமைக் கோசங்களை எழுப் பியவாறு யாழ் முற்றவெளியை நோக்கி நடை பவனியாகச் சென்றார்கள். முற்பகல் 11.00 மணியளவில் யாழ் முற்ற வெளியை சென்றடைந்த பேரணியுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் தொகை அலை கடலாக காட்சியளித்தது. 

அதனை தொடர்ந்து “எழுக தமிழ்” மக் கள் எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் ஆரம்பத்தில்  போரினால் பாதிக்கப்பட்டு தனது அவயவங்களை இழந்த பொதுமகன் ஒருவர் எழுக சுடரை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி நடைபெற்று தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. 

நிகழ்வின் முக் கிய அம்சமாக “எழுக தமிழ்” பிரகடனத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் வெளியிட்டு வைத் தார்.

அதனை தொடர் ந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த விசேட உரையினை நிகழ்த்தியிருந்தார்.  தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

மக்கள் பிரதிநிதிகளின் உணர்ச்சிபூர்வமான உரைகளுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர்.இறுதியில் அனைத்து மக்களினதும் ஒருமித்த உணர்ச்சிபூர்வமான எழுக தமிழ் கோசத்துடன் பேரணி நிகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை அத்தியாவசிய சேவைகள் கருதி இயங்கிய மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள் தவிர்ந்த ஏனைய வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் எழுக தமிழ் பேரணிக்கு பூரண ஆதரவைத் தெரிவித்து கதவடைப்பை மேற்கொண்டிருந்ததுடன், பல நூறு பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து பேரணிக்கு ஒருமித்த பேராதரவை வழங்கியிருந்தமை தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இலட்சியப் பாதைக்கான ஒற்றுமையான பயணத்தினை வெளி உலகத்திற்கு உறுதியாக வெளிப்படுத் தியுள்ளது.

பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் தமது எழுச்சி முழக்கத்தில் இராணுவமே வெளியேறு, பெளத்த மயமாக்கலை உடனே நிறுத்து, காணி சுவீகரிப்பு இனியும் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய், காணாமல்போன எம் உறவுகளுக்கு என்னவாயிற்று என பதில் சொல், நல்லாட்சி அரசாங்கமே நீயும் ஏமாற்றுகிறாயா, சுயாட்சியை வழங்கு, மீனவர்களின் கடல் வளத்தை சுரண்டாதே, சொந்த இடங்களில் எம்மை மீள்குடியமர்த்து,  உள்ளக விசாரணைகள் தேவையில்லை, சர்வதேச விசாரணையே தேவை என பல்வேறுபட்ட உரிமை கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்காக பேரணி ஏற்பாட்டுக் குழுவினரால் போக்குவரத்து ஒழுங்குகள், குடிநீர் வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையிலும் பேரணி எழுச்சிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பெருமளவான பொலிஸார் வீதிக்கடமைகளில் ஈடுபட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.         (செ-4-9)




THANKS   :  வலம்புரி / Valampuri

கருத்துகள் இல்லை: