செவ்வாய், 19 ஜூலை, 2011

தினமணி தலையங்கம்: ஏற்பது இகழ்ச்சி அல்ல! சமச்சீர் கல்வி

19-July-2011
தினமணி   தலையங்கம்: ஏற்பது இகழ்ச்சி அல்ல! 

மச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கி, உயர் நீதிமன்றத்திலேயே அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததன் பின்னணியில்தான் மீண்டும் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக இருந்தால் செய்யலாம்தான். ஆனால், அதனால் என்ன பயன் கிடைத்துவிடும் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய மிகமுக்கியமான தருணத்தில் இருக்கிறது தமிழக அரசு.


 தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஏன் தமிழக அரசு உணர்ந்துகொள்ளவில்லை என்பதும், நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு எதிரானதாக ஏன் கருதுகிறது என்பதும் விளங்காத புதிர்.

 சமச்சீர் கல்வி கூடாது என்பது தமிழக அரசின் நோக்கமல்ல. சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்பதுதான் தமிழக அரசின் விருப்பம். சில பாடங்கள் அடுத்த பாடத்துடன் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், சில பாடங்கள் தரமானதாக இல்லை என்பதும், ஆகவே பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்பதும் தமிழக அரசின் நியாயமான வாதம். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பாடத்திட்டத்தில் சில பகுதிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தமிழக அரசின் கல்வித்துறையைப் பொறுத்த விவகாரம் என்று நீதிமன்றம் தெளிவாகவே சொல்லிவிட்டது.

 தமிழக அரசின் அடிப்படை நோக்கத்தில் நீதிமன்றம் குறுக்கீடோ தடையோ செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லும் ஒரே விஷயம், இந்தக் கல்வியாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த ஒரு விஷயம்தான் இப்போது தமிழக அரசைச் சங்கடப்படுத்துவதாக இருக்கிறது.

 சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதும், தமிழக அரசு எந்தப் பாடங்கள் எல்லாம் திணிப்பு என்று கருதுகிறதோ அவற்றையெல்லாம் நீக்கி, தரமானதாக மாற்றுவதும் தமிழக அரசுக்கு மிகமிகச் சுலபம். இந்தப் பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை "எதிர்காலம் பாதிக்காமல்' என்ற தலைப்பில் 23.6.2011 அன்று நாம் எழுதிய தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறோம்.


 நிச்சயமாக கடந்த அரசால் பரிந்துரைக்கப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதையும், திமுக ஆட்சியாளர்கள் சிலவற்றை வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள் என்பதையும் பாடநூல்களில் காண முடிகிறது. ஒரு குழந்தைக்கான பாடப்புத்தகத்தில், சூரியன் உதிப்பது கிழக்கு என்று படம் போடுவதில் தவறில்லை. அதை உதயசூரியன் சின்னத்தைப்போல போடுவது ஆட்சியாளர்களின் குறுகிய மனநிலையைத்தானே காட்டுகிறது. மின்காந்த விசையைச் சித்திரமாக வரையும்போது அது உதயசூரியனின் கதிர்கள்போல விரிய வேண்டிய தேவை இல்லைதான். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தரப்படும் பள்ளிக்கூடப் பாடப்புத்தகம் என்ன கரைவேட்டியா? ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் எழுத்துகளைக் கருப்பு சிவப்பு வண்ணங்களில் பிரசுரித்திருக்கிறார்களே என்று கேட்கலாம். இவை தப்புதான். இதையெல்லாம் நீக்கிவிட்டு முறையாகப் பாடநூல்களை அச்சிடுவதும், பாடங்களை முறைப்படுத்துவதும் மிகவும் அவசியம்தான். அதை நீதிமன்றமும் அங்கீகரிக்கும்போது, ஏன் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தாமல் தள்ளிப்போட வேண்டும்?


 இன்று இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் சமூக ஆர்வலர்களும் முன்னாள் ஆசிரியர்களும், கல்வியாளர்களும் முந்தைய அரசு இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்கும்போதே, கல்வியாளர்களுக்கு ஒரு மாதிரிப் புத்தகத்தை அச்சிட்டுக் காட்டி, ஒருமித்த கருத்துக் கிடைத்த பிறகே அச்சிடுவதைத் தொடர வேண்டும் என்று அன்றைய திமுக அரசைக் கேட்டிருந்தால் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தால், இன்று பாடப்புத்தகத்தில் உள்ள தேவையில்லாத சில படங்கள், பகுதிகள் ஆகியவற்றுக்காக இன்று தமிழகப் பள்ளிக் கல்வியே முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டிருக்காது. அவர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? அவர்கள் ஏன் கருணாநிதியைக் குறை சொல்லாமல் என்னை மட்டுமே குறை சொல்கிறார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டால் அந்தக் கேள்விக்கான நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால், அதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைப்பது, கல்விச்சூழலை ஏளனப்படுத்துவதோடு, மாணவர்களின் மனநிலையிலும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஆகவே தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை விடுத்து, தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு, புதிய பகுதிகளை அடுத்த அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் சேர்த்து, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதுதான் முறையானது.


 சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை நமது கருத்தில் மாற்றமே இல்லை. அகில இந்தியத் தரத்திலான, சிறந்த தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தரத்திலான ஒரே கல்வித்திட்டம்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும். சமச்சீர் கல்வி என்ற பெயரில் தரம் குறைந்த கல்வித் திட்டமும் ஏற்புடையதல்ல. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி, தனியார் பள்ளிகளில் வேறொரு பாடத்திட்டம் என்பதும் ஏற்புடையதல்ல.  ஒரு சிக்கலைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதுதான் திறமை. ""சொத்துகள் முழுவதும் தனது அடிமைக்கே சொந்தம், என் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பெறுவதற்கு என் மகன் உரிமை படைத்தவர்'' என்று ஒரு தந்தை உயில் எழுதியபோது, அவரது மகன் கோபம் கொள்ளவில்லை, "என் அப்பாவின் அடிமை எனக்கும் அடிமையாக வேண்டும்' என்றானாம்.

 சமச்சீர் கல்வியைத் தரமானதாக, தவறுகள் இல்லாததாக மாற்றுங்கள். ஆனால், இந்த ஆண்டே அமல்படுத்துங்கள். பள்ளிகளில் பாடம் எதுவும் நடத்தப்படாமல் மாணவ, மாணவியர் வெட்டிப் பொழுது போக்குகிறார்கள். பெற்றோர்களும், 

ஆசிரியர்களும் குமுறுகிறார்கள். அரசின்மீது வெறுப்பு ஏற்படாவிட்டாலும், பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றிய சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதற்கல்ல.


 பிச்சைக்கு மட்டுமே ஏற்பது இகழ்ச்சி, தீர்ப்புக்கு அல்ல!

கருத்துகள் இல்லை: