சனி, 9 பிப்ரவரி, 2013

ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம்




Thanks : BBC News  :


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழகத்திலும், டெல்லியிலும் வேறு பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.


பௌத்த புனிதத் தலமான பீகாரில் உள்ள புத்த கயாவுக்கும், ஆந்திரத்திலுள்ள திருப்பதிக்கும் இலங்கை ஜனாதிபதி தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதை இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள், வழக்குரைஞர்கள் சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் போன்றவை கண்டித்துள்ளன.

சென்னை

சென்னையில் திமுக தலைமையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெஸோவில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளும் இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை கண்டித்து கூட்டம் ஒன்றை நடத்தியது.
இந்தக் கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழையும் தமிழர்களையும் அழிக்க இலங்கை ஜனாதிபதி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு கருணாநிதி நன்றி தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் ரயில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன், இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்க இந்திய அரசு முயல வேண்டும் என்று தெரிவித்தார்.

தில்லி

இலங்கை ஜனாதிபதி தில்லி வந்து அங்கிருந்து புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் மதிமுக தலைமையில் தில்லியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் அவர் தில்லி வராமல் ஒரிசா மாநிலம் கட்டாக் சென்று அங்கிருந்து புத்த கயா சென்றதாகத் தெரிகிறது
தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் முன்னர் பேசிய அக்கட்சியின் தலைவர் வைகோ, இந்தியா வர ராஜபக்ஷவை அனுமதித்தமைக்காக இந்திய அரசைக் கண்டித்தார்.
பிரதமர் அலுவலகத்துக்கு ஊர்வலம் செல்ல முயன்ற வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிசார் கைதுசெய்தனர்.

புத்த கயா

புத்த கயாவில் உள்ள மஹாபோதி விகாரையில் இலங்கை ஜனாதிபதி பிரார்த்தனையில் ஈடுபட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.
இலங்கை ஜனாதிபதிக்கு பீகார் முதல்வர் நித்தீஷ் குமார் விருந்து உபச்சாரம் வழங்கிய விடுதியின் முன்பாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாணவர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
புத்த கயாவில் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு இலங்கை ஜனாதிபதி திருப்பதி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

திருப்பதி


திருப்பதி அமைந்துள்ள ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்திலும் தமிழக ஆந்திர எல்லையிலும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கும் முகமாக நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் விழுப்புரம், திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் வழக்குரைஞர்களும் ராஜபக்ஷவின் வருகையைக் கண்டித்து நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: