கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள்!
காமராஜரின் பிறந்தநாள் இன்று என்று நமக்கெலாம் தெரியும். காலா காந்தி என்று அறியப்பட்ட பெருமனிதர் அவர்.
சங்கரர், பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத
அன்னைப்பாசத்தை துறந்தவர் அவர். அம்மா அருகில் இருந்த குடும்ப
உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே
அண்ட விடவில்லை அவர். விதிகளை மீறி அம்மாவுக்கு குழாய் இணைப்பு கொடுத்த
பொழுது,அதைத்தானே பிடுங்கி எறிந்து விட்டு ,"நான் பணம் கட்டி அனுமதி
கேட்டேனே ? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?"என்று கேட்டார்
அவர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி எழுவதற்கு காமராஜரே காரணம்.
எண்பது லட்சம் அரசு தரட்டும்,இருபது லட்சம் நான் தருகிறேன் ; என்
கட்டுப்பாட்டில் ஒரு மருத்துவக்கல்லூரி கட்டிவிடலாம். என்று ஒரு பணக்காரர்
கேட்க,ரயில்வே செஸ் பணத்தில் இருந்து முழுமையாக ஒரு கல்லூரியை
அரசுப்பொறுப்பில் கட்டி தனியார் நிழல் அதில் படாமல் காமராஜர்
பார்த்துக்கொண்டார்
ரேசனில் கேப்பை போடுறாங்க, அரிசி வாங்கிதாப்பா என்று
முதல்வராக இருந்த காமராஜரிடம் சொந்த அம்மா கேட்ட பொழுது ,”ஊருக்கு ஒண்ணு
உனக்கொண்ணா ? இதையே ஆக்கித்தின்னு !” என்றிருக்கிறார். அம்மா, விதவை தங்கை
அவரின் பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதம்
நூற்றிருபது ரூபாய் மட்டுமே அனுப்பி வந்திருக்கிறார். அதற்கு மேல் முப்பது
ரூபாய் கேட்ட பொழுது கொடுக்க மறுத்திருக்கிறார் ராஜாஜியின் ஆட்சி
குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் அவர் ஆட்சியை இழந்தார். தான்
முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்றால் தன்னுடைய ஆதரவாளர்கள் அமைச்சர்
பதவி கேட்க கூடாது என்பது காமராஜரின் நிபந்தனையாக இருந்தது. அப்படியே
ராஜாஜி அவர்களின் அமைச்சரவையை வைத்துக்கொண்டார்.
யாரைப்பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் கட்சிக்கு இடம் வாங்க அதையும் கொடுத்து விட்டவர். அதிகபட்ச அவரின் ஆடம்பரம் உணவில் முட்டை.
மதிய உணவுத்திட்டத்தை ஹரிஜன பள்ளிகளில் பின்பற்றுவது
போல ஒப்பந்தாரர்களிடம் தரலாம், நிதியில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார் .
அரசே செய்யும் என்று அழுத்தி சொல்கிறார் கர்மவீரர். மத்திய அரசு அகலக்கால்
என்று அனுமதி தர யோசிக்கிறது. மத்திய அரசு நிதி குறைவாக வரவே குறைந்த
எண்ணிக்கை பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தலாம் என்று சொன்ன பொழுது அதையும்
புறக்கணித்து எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தி சாதிக்கிறார் கருப்பு
காந்தி. நிதி போதாது என்ற பொழுது ,"இந்த அரசாங்கம் கையேந்தியாவது
பிள்ளைகளின் பசி தீர்க்கும்." என்று அவர் முழங்கினார்.
பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது
,"எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை
தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!" என்று சொன்னவர்.
சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம்
எடுத்தவர் அவர்.
தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே
துவங்குகிறது.
காமராஜருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தவறான தகவல்.
ஆங்கில நூல்களை வாசிக்கிற பழக்கம் அவருக்கு உண்டு. அதிகாரிகளின்
கோப்புகளில் தவறு இருந்தால் அதை சரி செய்கிற அளவுக்கு அவர் ஆங்கிலம்
அறிந்திருந்தார். சாஸ்திரி அவர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில்
பத்திரிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் இக்கட்டான சூழலில் தானே ஆங்கிலத்தில்
பதிலளித்து அசத்தியிருக்கிறார்.
அசத்தியிருக்கிறார்.
காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி
போடவில்லை . "இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப்
போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' "என்றவர்.
அப்பொழுது திமுகவினர் "கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர்
தோற்றுப்போனார் "என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்,"படிக்காத காமராஜர்
கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார் !" என்று பதில் போஸ்டர்
ஒட்டினார்.
இறந்த பொழுது பத்து செட் கதர் சட்டைகள்,சில நூறு ரூபாய்கள் அவ்வளவு தான் அவரிடம் இருந்தது என்று நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதரின் கொஞ்ச நஞ்ச நினைவுகளாது அறம் சார்ந்த அரசியலை ஞாபகப்படுத்தட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக