வெள்ளி, 18 ஜூலை, 2014

MH17 நடுவானில் மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

http://tamilepaper.blogspot.in/p/daily-thanthi_07.html



நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது: மலேசியாவுக்கு வந்த
விமானம் நொறுங்கி 295 பேர் பலி
ரஷியா அருகே ஏவுகணை தாக்குதலில் பயங்கரம்
மலேசிய பயணிகள் விமானம் ரஷியா அருகே பறந்த போது ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 295 பேர் பலியானார்கள்.
 =========================================================

ரஷியாவுக்கு அருகில் உள்ள நாடு, உக்ரைன்.

சண்டை

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷியாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்து விட்டு, பிறகு ரஷியாவுடன் இணைந்தது.

அதே பாணியில், கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களும், தன்னாட்சி பிரகடனம் செய்து விட்டு, ரஷியாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் உக்ரைன் அரசுப்படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக நடந்த சண்டையில், 55 பேர் பலியானார்கள்.

அந்த கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா உதவி செய்து வருவதாக கருதப்படுகிறது. எனவே, ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மலேசிய விமானம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.

அந்த விமானம், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் ஆகும். நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அந்த விமானம் புறப்பட்டது. அதில், 280 பயணிகளும், 15 சிப்பந்திகளும் இருந்தனர்.

சுட்டு வீழ்த்தப்பட்டது

அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது.

விமானம் விழுந்த இடம், கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது. அந்த பகுதி, கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வரும் பகுதி ஆகும். மேலும், அப்பகுதி ரஷியாவுக்கு அருகே உள்ளது. ரஷிய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது.

295 பேர் பலி

அந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் நாட்டு உள்துறை அமைச்சக ஆலோசகர் ஆன்டன் கெராஷ்செங்கோ தெரிவித்தார். தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்க ஏவுகணை உதவியால், விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகி விட்டதாக அவர் கூறினார்.

ஏவுகணையால் தாக்கப்பட்டபோது, விமானம் 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மலேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

கடந்த சில வாரங்களில் எத்தனையோ உக்ரைன் விமானங்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர். நேற்றுமுன்தினம் கூட ஒரு ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது.
தேடும் பணி

இதற்கிடையே, விமானம் விழுந்த இடத்துக்கு அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தனர். விமானத்தை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். விமானத்தின் சேத பகுதிகளை உள்ளூர் மக்கள் பார்த்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி உக்ரைன் பிரதமர் எரிசெனி யட்செனிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 8-ந் தேதி, மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. அந்த விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

4 மாதங்கள் கடந்த நிலையில், மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், இந்த கோர நிகழ்வைச் சந்தித்துள்ளது. அதில் பயணம் செய்த 295 பேரும் பலியாகி விட்டனர். 

கருத்துகள் இல்லை: