செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

India strongly condemns Srilanka on 'derogatory' article against TN CM Jaya இலங்கைக்கு இந்தியா கண்டனம்




 அ.தி.மு.க. கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை

அ.தி.மு.க.வின்கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இலங்கை தூதரை நேரில் அழைத்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காககண்டனம் தெரிவித்தது.


புதுடெல்லி, ஆக.5-

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும் அதை வன்மையாக கண்டிக்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களும் எழுதி வருகிறார்.

அவதூறு கட்டுரை

இதை கேலி செய்யும் வகையிலும், முதல்-அமைச்சர் ஜெய லலிதாவை அவமதிக்கும் வகையிலும் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் சமீபத்தில் அவதூறாக ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இலங்கை அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த பிரச்சினையை முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து, இணையதளத்தில் வெளியான கட்டுரைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட இலங்கை ராணுவ அமைச்சகம், அந்த கட்டுரையை உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கியது.

அ.தி.மு.க. கோரிக்கை

இந்த பிரச்சினையை அ.தி.மு.க. நேற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கிளப்பியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள். அத்துடன் இலங்கை அரசை கண்டித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதில் அளித்த வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய அரசு இலங்கை தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்கும் என்றார்.

இலங்கை தூதரை அழைத்து கண்டனம்

இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னேயை நேரில் அழைத்தது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இலங்கை விவகாரங் களை கவனிக்கும் இணைச் செயலாளர், அவதூறு கட்டுரை தொடர்பாக பாராளு மன்றத்தில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கோபத்தையும் கவலையும் சுதர்சன் சேனவிரத்னேயிடம் எடுத்துக்கூறி இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.

பாராளுமன்றத்தில் பிரச்சினை

முன்னதாக பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. குழு தலைவர் தம்பிதுரை இந்த பிரச்சினையை கிளப்பி பேசுகையில் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொல்லைகளுக்கு ஆளாவது பற்றியும், கச்சத்தீவு பிரச்சினை பற்றியும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதங்கள் எழுதி இருக்கிறார். இதுபற்றி இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் அவதூறாக கட்டுரை வெளியிட்டு உள்ளனர். இது மிகவும் துரதிருஷ்டமானது ஆகும். இதனால் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதை மத்திய அரசு இன்னும் வன்மையாக கண்டிக்கவில்லை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

வாக்குறுதி

பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண் போம் என்று பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை. இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகிறதா? என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரைக்கு மத்திய அரசு இன்னும் தனது கண்டனத்தை தெரிவிக்கவில்லை. பிராந்திய மக்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பு அளிக்க வேண்டும்.

அவர்கள் (இலங்கை) வெறும் 2½ கோடி பேர்தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 4 கோடி மக்கள் உள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு யார் பக்கம் இருக்கிறது என்பதையும், இந்த பிரச்சினையில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

தீர்மானம்

120 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவை அவர்கள் (இலங்கை) அவமதிப்பது ஆச்சரியமாக உள்ளது. இலங்கை அரசின் செயல்பாடு இந்தியாவின் பெருமைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இலங்கை அரசை வன்மையாக கண்டித்து ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.

இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

அந்த சமயத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கை அரசை கண்டித்தும் குரல் எழுப்பினார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.

வெங்கையா நாயுடு கண்டனம்

அப்போது பாராளுமன்ற விவகார துறை மந்திரி வெங்கையா நாயுடு குறுக்கிட்டு பேசுகையில், இது (இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டது) முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விவகாரத்தை கண்டிப்பதில் அரசுக்கு எந்த தயக்கமும் கிடையாது என்றும் கூறினார்.

இந்த பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ்ஜிய உறவு சம்பந்தப்பட்டது என்பதால், அரசு இதை கவனத்துடன் கையாளும் என்றும், இந்த பிரச்சினையில் உறுப்பினர்களின் உணர்வுகளை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம் தான் தெரிவிப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

சுஷ்மா சுவராஜ்

பின்னர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், உறுப்பினர்களின் கவலையில் தான் பங்குகொள்வதாகவும், இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். அத்துடன், இலங்கை தூதரை அழைத்து இந்த பிரச்சினை தொடர்பாக சபையில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் அவரிடம் தெரிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் உறுதி அளித்தார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முதலில் 25 நிமிடம் சபையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டும் ஒரு முறை அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

மேல்-சபையில் அமளி

டெல்லி மேல்-சபை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் எழுந்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் அவதூறாக கட்டுரை வெளியிட்ட பிரச்சினையை கிளப்பினார். அத்துடன் இந்த பிரச்சினை குறித்து சபையில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.

அவருக்கு ஆதரவாக அ.தி. மு.க. உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குரல் எழுப்பினார்கள். மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அ.தி.மு.க.வின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டதால் அடுத்தடுத்து பகல் 11.17 மணி வரையிலும், பின்னர் 12 மணி வரையிலும் இரு முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.

அவமதிப்பு

அதன்பிறகு சபை கூடியபோதும் இந்த பிரச்சினையை மீண்டும் கிளப்பிய அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குரல் எழுப்பியதோடு இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்தும் கோஷம் போட்டனர். அப்போது பேசிய மைத்ரேயன், தமிழக அரசை மட்டுமின்றி இந்திய அரசையும் இலங்கை அவமதித்து இருப்பதால், டெல்லியில் உள்ள அந்த நாட்டின் தூதரை மத்திய அரசு அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் குறுக்கிட்டு பதில் அளிக்கையில், மைத்ரேயன் எழுப்பிய பிரச்சினை மிகவும் தீவிரமானது என்றும், இந்த பிரச்சினையில் இந்தியா தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும், டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை: