வியாழன், 3 செப்டம்பர், 2015

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் இரா சம்பந்தர்

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியபோது சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்தார்.

நாடாளுமன்றம் கூடியதும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சித் தலைவரின் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வேண்டுகோள்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதன்படி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர் சம்பந்தன் கடமையாற்றவுள்ளார்.

தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாடவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஏ. அமிர்த்தலிங்கம் 1977ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டுவரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்கள் கிடைத்தன.

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நியமிக்கப்படவேண்டுமென்று

அந்த கூட்டமைப்பின் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த பின்னிணியில் எதிர்க்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.

சம்பந்தர் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: